அரசியல்

"மாணவர்களின் கல்வியைக் கெடுக்காதீர்"- அண்ணாமலை கண்டனம்!

பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.


Annamalai Condemns
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை தி.மு.க. அரசு நடத்தியதற்கு, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

அரசுப் பள்ளிகளில் முகாமுக்கு எதிர்ப்பு

"ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், குமணந்தாங்கல் அரசுப் பள்ளியிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க. அரசு."

"ஏற்கனவே, திருச்சியிலும் இதேபோல அரசுப் பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தி.மு.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்."

துரைமுருகன் பதிலுக்குக் கண்டனம்

"இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், 'ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை' என கூச்சமின்றிப் பதிலளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்."

"உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப் பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

திட்டத்தின் செயலாக்கம் குறித்து விமர்சனம்

மேலும், இந்தத் திட்டத்தின் செயலாக்கம் குறித்துப் பேசிய அவர், "ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்துக் கெடுக்கிறீர்கள்?"

"மாணவர்களின் கல்வியைத் தடுத்து அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை தி.மு.க. அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.