அரசியல்

அடிமைத்தனத்தைப் பற்றி இபிஎஸ் பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன பழனிசாமியா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அடிமைத்தனத்தைப் பற்றி இபிஎஸ் பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
CM Stalin and Edappadi Palaniswami
உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன பழனிசாமியா? தமிழ்நாடு மக்கள் அரசியல் தெளிவு, அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது. நமக்குள் இருப்பது கொள்கை நட்பு. இந்த கொள்கை உறவின் ஆழத்தை தலைமுறை கடந்தும் நாம் சொல்ல வேண்டும்.

நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ள காலகட்டத்தில், கொள்கை உணர்வோடு நாம் இந்த மேடையில் கூடியுள்ளோம். ஆகையால் திராவிட - பொதுவுடைமை மாநாடாகத்தான் இதனை நான் கருதுகிறேன். நமது தோழமை இயக்கத்தை சேர்ந்தவர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். நமது இந்த ஒற்றுமைதான் பலரின் கண்களை உறுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய தேர்தல் ஆணையத்தைக் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக்கிவிட்டார்கள். தேர்தல் ஆணையர் நியமனத்தில்தான் சதி என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி நடக்கிறது. ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில் தரவில்லை.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று எச்சரித்தோமோ, அதெல்லாம் நடக்கிறது. ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கிவிட்டனர். தேர்தல் ஆணையத்தை தங்கள் கிளை அமைப்பாக மாற்றிவிட்டது பாஜக.

அமலாக்கத் துறையை வைத்து ஒத்துவராத எதிர்க்கட்சிகளை மிரட்டுவார்கள் என்றோம். அது நடக்கிறது. உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன பழனிசாமியா? தமிழ்நாடு மக்கள் அரசியல் தெளிவு, அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள்.

பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது குபீர் பாசம் பொத்துகிட்டு வந்திருக்கிறது. அடிமைத்தனத்தைப் பற்றி பழனிசாமி பேசலாமா? பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்களை பொறுத்தவரை இங்கே இருக்க யாரும் யாருக்கும் அடிமையில்லை.

தமிழ்நாட்டுக்காக உண்மையாக உழைத்தவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும். 2026 தேர்தலில் இந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்று அவர் தெரிவித்தார்.