அரசியல்

காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

“தமிழகத்தின் நரகமாக காவல் நிலையங்கள் மாறி வருகிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? டிடிவி தினகரன் கேள்வி
TTV Dhinakaran
கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர், முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை விசாரணையில், அவர் கோவை, பேரூர் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், “தமிழகத்தின் நரகமாக காவல் நிலையங்கள் மாறி வருகிறதா?” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கோவை மாவட்டம், பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

திரைப்பட கதைகளுக்கே சவால்..

புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது.

காவல்துறை மீது நம்பிக்கை இழப்பு

காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது.

கேள்விகளும் சந்தேகங்களும்

சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.