சென்னை: அதிமுக தொடர்பான அவதூறு வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்தனர். ஆனால் அதை ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டார்'' என்று கூறி இருந்தார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சுக்கு அதிகவினர் கடும் எதிர்ப்பு தெரித்தனர். ''எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது. அதிமுக ஒரு இரும்பு கோட்டை. அதை யாரும் அசைக்க முடியாது. அப்பாவு இதுபோல் அதிமுகவினர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த திமுகவினர், ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்றி திமுக ஆட்சி அமைக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை ஒருபோதும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவுடன் நாம் ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். இதுதான் ஸ்டாலினின் பெருந்தன்மை. இதுதான் திமுக'' என்று கூறி இருந்தனர்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு திமுகவில் சேர்ந்த கடந்தகால வரலாறுகளை திமுகவினர் சிலர் சுட்டிக்காட்டினார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதற்கிடையே அ.தி.மு.க.வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை எடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.