அரசியல்

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்ன?

திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்,பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்பது உட்பட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்ன?
PMK Chithirai full moon maanaadu
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலில் சித்திரை முழுநிலவு மாநாடு இன்று மாலை தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறும் நிலையில், மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு-

1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!
2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!
3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!
4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!
5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக மேலும் 2% உயர்த்த வேண்டும்!
6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

கிரிமிலேயர் முறையை நீக்க தீர்மானம்:

7. மத்திய அரசின் ஒபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!
8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!
9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!
10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி தீர்மானம்:

11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!
12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!
14. ஜம்மு -காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு!