இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!
Vice President Election
நாட்டின் 17-வது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

யார் இந்த வேட்பாளர்கள்?

சி.பி. ராதாகிருஷ்ணன்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகித்து வரும் சி.பி. ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னதாக, தமிழக பாஜக தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

பி. சுதர்சன் ரெட்டி: எதிர்க்கட்சிகளின் அணியான 'இந்தியா' கூட்டணி சார்பில் போட்டியிடும் இவர் தெலங்கானாவைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக 2007 முதல் 2011 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கோவாவின் முதல் லோக் ஆயுக்த தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தேர்தல் நடைமுறைகள் மற்றும் வெற்றி வாய்ப்பு

இந்தத் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண். எஃப்-101-இல் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பத் தேர்வை வேட்பாளரின் பெயருக்கு எதிரே குறிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிக்க உறுப்பினர்கள் கட்சி கொறடாக்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இரு அவைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 788-ஆக இருந்தாலும், தற்போது 782 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்தத் தேர்தல்?

நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். 2027, ஆகஸ்ட் 10 வரை அவருக்குப் பதவிக் காலம் இருந்த நிலையில், அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.