இந்தியா

டெஸ்லா கார் விற்பனை இந்தியாவில் மந்தம்.. வெறும் 600 கார்களே முன்பதிவு!

இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லா நிறுவனம், இதுவரை வெறும் 600 ஆர்டர்கள் மட்டுமே பெற்றுள்ளதால், இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டெஸ்லா கார் விற்பனை இந்தியாவில் மந்தம்.. வெறும் 600 கார்களே முன்பதிவு!
Tesla Model Y Gets Over 600 Bookings After India Launch
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், பல ஆண்டுகளாக முயற்சித்தும் இந்தியாவில் கால் பதிக்க முடியாமல் இருந்தது. வரி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது. ஆனால், அதன் விற்பனை எலான் மஸ்க்கின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.

அதிக விலை மற்றும் வரிவிதிப்பே காரணம்

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது 'ஒய்' மாடல் கார்களை அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவும் உடனடியாகத் தொடங்கியது. ஆனால், இதுவரை சுமார் 600 கார்கள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எலான் மஸ்க்கிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்தியாவில் பிற மின்சார கார்கள் சுமார் ரூ.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், டெஸ்லா காரின் விலை ரூ.69.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலை மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றால் முன்பதிவு மந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் கட்ட இறக்குமதி திட்டம்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வருடத்திற்கு 2,500 கார்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய சந்தை நிலவரம்

அமெரிக்காவில் டிரம்பின் வரி விதிப்பால், 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டில் பிரீமியம் மின்சார கார்களின் விற்பனை 5% மட்டுமே அதிகரித்துள்ளது. உலக அளவில் $51,000 (சுமார் ரூ.45,00000) முதல் $79,000 (சுமார் ரூ.70,00000) வரையிலான விலையில் உள்ள மின்சார கார்கள் வெறும் 2,800 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இந்தியாவில் சார்ஜிங் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் போது மின்சார கார் விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.