இந்தியா

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் உடனான வாகா எல்லை மூடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேர் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை தீவிரவாத தாக்குதல் நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு

மேலும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்தில் வெளியேறவும், பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தல்

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும், பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரேனும் இருந்தால் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவைக் குழு கூட்டத்தை தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அனைத்துக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.