இந்தியா

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி.. இளைஞனின் செயலால் பரபரப்பு

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி.. இளைஞனின் செயலால் பரபரப்பு
Young man Puts Knife On Minor Girl's Neck
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில், காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து இளைஞர் ஒருவர் மிரட்டிய நிலையில், துணிச்சலுடன் செயல்பட்ட பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் மாணவி பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

10ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது தினமும் அந்த இளைஞர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று, மாலை 4 மணியளவில் மாணவியிடம் இளைஞர் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், மாணவி அதை ஏற்க மறுத்ததால், கோபமடைந்த இளைஞர் தனது சட்டைப் பையிலிருந்து கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் வைத்து, கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த பொதுமக்கள், மாணவிக்கு எதுவும் செய்ய வேண்டாம் எனக் கெஞ்சினர். ஆனால், இளைஞன் யாருடைய பேச்சையும் கேட்காமல் மிரட்டிக் கொண்டிருந்தான். இதற்கிடையில், சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இரண்டு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவர் இளைஞனின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். அதேசமயத்தில், மற்றொரு காவலர் பின்னால் இருந்த சுவர் மீது ஏறி குதித்து வந்து, லாவகமாக இளைஞனைப் பிடித்து அவனது கையிலிருந்த கத்தியைப் பறித்தார். இதனால் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞனை சரமாரியாகத் தாக்கினர்.

இதனைத்தொடர்ந்து, இளைஞனை கைது செய்த போலீசார், ஷாஹுபுரி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.