இந்தியா

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!
M.P. Policeman's innovative fraud
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காவலர், 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தக் காவலர் 2011 இல் மத்தியப் பிரதேச போலீஸ் படையில் சேர்ந்தார். ஆரம்பத்தில் போபால் போலீஸ் லைன்ஸ் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். சேர்ந்த சிறிது காலத்திலேயே, அவர் சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சிகளை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்குச் செல்லாமல், அவர் விதிஷாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

இது குறித்து தனது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவோ அல்லது விடுப்பு கேட்கவோ செய்யாமல், அந்தக் காவலர் தனது பணி ஆவணங்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் போபால் போலீசாருக்கு அனுப்பியுள்ளார். அவர்களும் இது குறித்து எந்த ஆய்வும் செய்யாமல், அதனை ஏற்றுக் கொண்டனர். மேலும், சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் அந்த காவலர் குறித்து போபால் போலீசார் விசாரிக்கவில்லை.

மாதங்கள் கடந்து ஆண்டுகள் ஆன போதும், அந்தக் காவலர் ஒருபோதும் பணிக்கு வரவில்லை. இருப்பினும், அவரது பெயர் பட்டியலில் தொடர்ந்து இருந்துள்ளதுடன், அவரது மாதச் சம்பளம் தவறாமல் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரு காவல் நிலையத்திற்குள் நுழையாமலோ அல்லது பயிற்சி மைதானத்திற்குச் செல்லாமலோ, அவர் ரூ.28 லட்சத்திற்கும் அதிகமாகச் ஊதியமாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில், 2011 குழுவினருக்கான ஊதிய தர மதிப்பீட்டைத் துறை தொடங்கியபோதுதான் இந்த நூதன மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அந்த தலைமைக் காவலர் பெயரை ஆலோசித்தபோது, அப்படியொருவரை யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவரது பணி வரலாறு குறித்து ஆராய்ந்தபோது, அப்படி ஒன்று இருந்திருக்கவேயில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்த காவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் தான் மனநலன் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் அங்கிதா கட்டேர்கர் கூறியதாவது, “ஒரு நாளும் வேலை செய்யாத ஒருவருக்கு சம்பளம் எப்படி தொடர்ந்து வழங்கப்பட்டது என்பது குறித்து உள்துறை விசாரணை நடைபெறுகிறது. இதுவரை, அவர் ரூ.1.5 லட்சத்தை துறைக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். மீதமுள்ள தொகையை தனது எதிர்கால சம்பளத்திலிருந்து கழிப்பதன் மூலம் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டார். அவர் தற்போது போபால் காவல் எல்லையில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும், மேலும் பல சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மூத்த போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், இந்த விஷயத்தைக் கையாளுவதிலும் மேற்பார்வையிடுவதிலும் அலட்சியமாகச் செயல்பட்ட எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.