இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்
மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும் இத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் சண்டை, அகமதாபாத் விமான விபத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் இந்தக் கூட்டத்தொடர் பரபரப்பாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் வியூகம்

ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் அரசியல் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்குவது வழக்கம். அதைப் போலவே, 24 எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 19) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது, உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழு பயணம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் உள்ளிட்ட 8 பிரச்சினைகளை எழுப்பவும், இரு அவைகளிலும் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் ஒருமித்து செயல்படவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் நிலைப்பாடு

இதேபோல், ஆளுங்கட்சியான பாஜக தரப்பில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்து கலந்துரையாடினர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று (ஜூலை 20) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 51 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமை வகித்தார். அவர் பேசும்போது, "மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு உரிய பதில் அளிக்கப்படும்" என்றார்.

மசோதாக்கள் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தொடரில், தேசிய விளையாட்டு நிர்வாகம், புதிய வருமான வரி, இந்திய துறைமுகங்கள், வணிக கப்பல் போக்குவரத்து, கோவா புராதன சின்னங்கள் பராமரிப்பு தொடர்பான மசோதாக்கள், தேசிய போதை மருந்து தடுப்பு, வணிகம் செய்வதை எளிதாக்குதல், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், மணிப்பூர் ஜிஎஸ்டி, சுரங்கம், கனிமங்கள் தொடர்பான திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக எம்.பிகளின் நிலைப்பாடு

மேலும், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதே போன்று, கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார்.