இந்தியா

அரசு பொறியாளர் உடல் சடலமாக மீட்பு.. யோகி ஆட்சியின் சாதனை.. காங்கிரஸ் விளாசல்

உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன பொதுப்பணித்துறை பொறியாளர் உடல் அணையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பொறியாளர் உடல் சடலமாக மீட்பு.. யோகி ஆட்சியின் சாதனை.. காங்கிரஸ் விளாசல்
யோகி ஆதித்யநாத் ஆட்சியை விமர்சித்த காங்கிரஸ்

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வந்த விவேக் குமார் சோனி என்பவர் பொதுப்பணித்துறை பொறியாளராக பணிப்புரிந்து வந்துள்ளார். அவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று விவேக் குமார் சோனியின் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்திரா அணை பகுதிக்கு அருகில் விவேக் குமார் சோனியின் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டு போலீஸார் சந்தேகமடைந்தனர். தொடர்ந்து, மாநில பேரிடர் குழு உதவியுடன் அணையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பொறியாளர் சடலமாக மீட்பு

இந்நிலையில், போலீஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விவேக் குமார் சோனியின் உடல் அணையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் விளாசல்

உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை விமர்சித்து காங்கிரஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், “லக்னோவில் பொதுப்பணித்துறை பொறியாளராக பணிப்புரிந்த விவேக் சோனி,  இந்திரா அணையில் இறந்து கிடந்தார். 

அவர் காணாமல் போனதிலிருந்து இறக்கும் வரை காவல்துறையினருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை. இதுதான் யோகி ஆதித்யநாத் எட்டு ஆண்டு ஆட்சியின் சாதனை” என்று குற்றம்சாட்டியுள்ளது.