இந்தியா

திருமணமான பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திரும்ப கோரி போராட்டம்!

தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணமான பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திரும்ப கோரி போராட்டம்!
Protest demanding return of dowry
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் நகரில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வரதட்சணையைத் திரும்பக் கோரி இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமகிருஷ்ணாபூரைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் லாவண்யா, அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் இவர்களின் வாழ்க்கை சுமுகமாகச் சென்றாலும், பின்னர் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அடிக்கடி சண்டைகள் வந்துள்ளன. இதனால், லாவண்யா தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி, லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் சிக்கினார். துரதிர்ஷ்டவசமாக, லாவண்யாவின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லாவண்யா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து, கடந்த 24 ஆம் தேதி இரவு அவரும் உயிரிழந்தார்.

இந்த நிலையில், லாவண்யாவின் உடலை கணவர் சுரேஷ் அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், லாவண்யாவின் தாய், சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கணவர் சுரேஷின் வீட்டுக்கு முன் உடலை வைத்து ‘எங்கள் மகள் இறந்துவிட்டாள். அவளுக்குக் வரதட்சணையா கொடுக்கப்பட்ட ரூ. 50 லட்சத்தையும் 35 சவரன் தங்க நகைகளையும் திருப்பிக் கொடுங்கள். இல்லையெனில், உடலை அடக்கம் செய்யமாட்டோம்' என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரதட்சணை தகராறு காரணமாக லாவண்யாவின் உடல் இரண்டு நாட்கள் ஆம்புலன்ஸிலேயே வைக்கப்பட்டது. பின்னர், உள்ளூர்வாசிகள், சமூக சேவையாளர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த லாவண்யாவின் குடும்பத்தினர், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்து, பெண்ணுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.