இந்தியா

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு- தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் கைது!

நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தலைமறைவாக இருந்த மனோகர்லால் தாக்கட் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு- தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் கைது!
manohar lal dhakad arrested
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் கணவர், டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இணையத்தில் பரவிய வீடியோ:

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஒரு வெள்ளை நிற காருக்கு வெளியே ஒரு ஆணும், பெண்ணும் அநாகரீகமான முறையில் உடலுறவில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ மே 13 அன்று எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவுச்சாலையில் பொதுமக்கள் பார்வையில் அப்பட்டமாக நடந்த இந்தச் செயல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. வீடியோவில் காணப்படும் வெள்ளை கார், போக்குவரத்துத் துறையின் வாகன எண் பதிவுகளின்படி, மனோகர்லால் தாக்கட் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் காணப்பட்ட ஆண், மாண்ட்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாக்கட் என அடையாளம் காணப்பட்டார். இவரது மனைவி சோஹன் பாய், மாண்ட்சூர் மாவட்ட பஞ்சாயத்தின் 8-வது வார்டு கவுன்சிலராகவும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உறுப்பினராகவும் உள்ளார். மனோகர்லால் தாக்கட் உஜ்ஜயினில் பதிவு செய்யப்பட்ட தாக்கட் மகாசபையின் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மனோகார் லால் தாக்கட்:

ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மாண்ட்சூர் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மனோகர்லால் தாக்கட் மற்றும் அவருடன் இருந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் அநாகரீகமான செயல், பொது வழியில் இடையூறு போன்ற செயல்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாண்ட்சூர் காவல்துறை தெரிவித்திருந்தது.

தலைமறைவாக இருந்த மனோகர்லால் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுத்தொடர்பாக, பன்புரா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ரமேஷ்சந்திர டாங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட மனோகர்லால் தகாத் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் காணப்படும் பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மனோகர்லாலின் பழைய காதலி’ என்று கூறினார். மனோகர்லால் தாகத் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கரோத் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாஜக உறுப்பினரா?

மனோகர்லால் தாக்கட் பாஜக உறுப்பினர் என்று தகவல்கள் பரவியதால் அரசியல் வட்டாரத்திலும் இது புயலை கிளப்பியது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக உடனே மறுப்பு தெரிவித்தது.
மாண்ட்சூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் தீட்சித் கூறுகையில், மனோகர்லால் தாக்கட் கட்சியின் முதன்மை உறுப்பினர் இல்லை என்றும், அவர் ஆன்லைனில் உறுப்பினராகியிருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அவரது மனைவி பாஜக ஆதரவுடன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபடுவோர் கட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜேஷ் தீட்சித் இவ்வாறு கூறினாலும், பாஜகவின் முன்னணி தலைவர்களுடன் மனோகர்லால் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மனோகர்லால் தாக்கட் வகித்து வந்த தாக்கட் மகாசபையின் தேசிய செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பும் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் ரத்லம் ரேஞ்ச் டிஐஜி மனோஜ் சிங் கூறுகையில், ”ஒரு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், சமூக நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல். இத்தகைய செயல்கள் பொது இடங்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.