இந்தியா

'உசுரு முக்கியம் பிகிலு'-காதலில் விழுந்த மனைவி..உஷாரான கணவன்!

காதலுக்கு கண்ணில்லை என சொல்வதை போல, இப்போதெல்லாம் திருமணமும் தடையில்லை என்றாகிவிட்டது. ஆனால், உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவமோ, இதற்கும் அடுத்த ரகம், அதுவும் அடடே ரகம்... அதாவது உசுருக்கு பயந்து தனது மனைவியை அவரது காதலனுக்கே தாரைவார்த்த சம்பவம் படு வைரலாகி வருகிறது.

'உசுரு முக்கியம் பிகிலு'-காதலில் விழுந்த மனைவி..உஷாரான கணவன்!
காதலில் விழுந்த மனைவி..உஷாரான கணவன்

உத்தரபிரதேசத்தின் சந்த் கபீர் நகரில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவருக்கும் கோராக்பூர் பகுதியைச் சேர்ந்த ராதிகா என்பவருக்கும், கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறக்க, “அழகான மனைவி அன்பான துணைவி” என காலம் போன போக்கில் வாழ்ந்து வந்தார் பப்லு. ஆனால் வேலைக்காக பப்லு வெளியூர் செல்ல, தனிமையில் வாடிய ராதிகாவுக்கு விகாஸ் என்பவரின் நட்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்துள்ளது. “தோழா தோழா தோள் கொடு தோழா” எனத் தொடங்கிய இந்த நட்பு, நாளடைவில் “நிலவை கொண்டு வா... கட்டிலில் கட்டி வை...” என நெருப்பை பற்ற வைக்கும் அளவிற்கு காதல் தீயாக கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.        
 
ஒருகட்டத்தில் விகாஷும் ராதிகாவும் உல்லாசப் பறவைகளாக வலம் வர, இந்த செய்தி கிராம மக்கள் மூலம் பப்லுவுக்கு தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், “எரிமலை எப்படி வெடிக்கும்” என்ற மோடில் மனைவியை வெளுத்து வாங்க நினைத்த பப்லு, பின்னர் நிதானமாக யோசித்துப் பார்த்துள்ளார். இப்படி மனைவியின் காதலை தட்டிக் கேட்ட கணவன்மார்கள் திடீர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மாண்டு போனதும், கண்டம் துண்டமாக வெட்டி சிமெண்ட் தொட்டிக்குள் புதைக்கப்பட்டதுமாக பத்திரிகைகளில் படித்த சில பல செய்திகள் பப்லுவுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது. 

இனிமேல் இந்த விவகாரத்தை வீரனாக டீல் செய்வதை விட, விவரமாக செட்டில் செய்துவிட வேண்டும் என முடிவு செய்த பப்லு, ஊருக்குச் சென்று மனைவியின் நடத்தைகளை ரகசியமாக கண்காணித்துள்ளார். அதில், கிராம மக்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை எனத் தெரிந்ததும், அப்படியே நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து மனைவி ராதிகாவை, அவரது காதலன் விகாஷுக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார். அதுவும் ஊரார் முன்னிலையில் திருமணம் செய்துவைத்த பப்லு, சாட்சி கையெழுத்தும் போட்டு புதுமண தம்பதிகளோடு போட்டோ எடுத்து அட்சதை போட்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார். 

மனைவியின் புதிய வாழ்க்கையில் இனி எந்த பிரச்சினைகளும் வரக் கூடாது என, குழந்தைகள் இருவரையும் தானே பார்த்துக்கொள்கிறேன் என, அந்த பொறுப்பையும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு தியாகியாகவே மாறிவிட்டார் பப்லு. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய பப்லு, ”ஒருவேளை இந்த விவாகரம் பற்றி மனைவியிடம் கேட்டால், காதலனுடன் சேர்ந்து தன்னை கொலை செய்துவிடுவாரோ என பயந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார். இதுபோன்ற விவகாரங்களில், சமீபத்தில் நடந்த சில கொலைகளை செய்திகளில் படித்ததாகவும், அதன் பின்னர் தான் இப்படி முடிவு எடுத்ததாகவும்” பப்லு கூறியுள்ளார். 

அதேபோல், முறைப்படி விவாகரத்து வாங்கவில்லை என்றாலும், கிராம மக்களும் குடும்பத்தினரும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டதால், இனிமேல் சிக்கல் இல்லை என பப்லு தெரிவித்துள்ளார். கணவனே கண்கண்ட தெய்வம் என்ற காலம் மாறி, கணவனே தனது மனைவியை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்த இச்சம்பவம், உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.