கேரள மாநிலம் காசர் கோட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு கல்லுராவியைச் சேந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், அப்துல் ரசாக் தனது மனைவின் தந்தைக்கு முத்தலாக் கூறி வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை கடந்த 21-ஆம் தேதி அனுப்பியுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்துல் ரசாக் மனைவி தனது கணவர் மீது ஒஸ்துர்க் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி எனக்கும் என் கணவர் அப்துல் ரசாக்கிற்கும் திருமணம் நடந்தது. அப்போது என் கணவர் குடும்பத்தார் வரதட்சணையாக 50 சவரன் கேட்டார்கள். ஆனால், அதில் 20 சவரன் மட்டுமே எங்களால் கொடுக்க முடிந்தது.
இந்த 20 சவரன் நகைகளையும் என் கணவர் விற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள நகைகளை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை செய்தனர். வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் என்னைப் பூட்டிவைத்து உணவுக் கொடுக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்துல் ரசாக் தன்னிடம் 12 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக அப்பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையின் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் மூன்று முறை முத்தலாக் கூறுவதன் மூலம் விவாகரத்து பெற்று வந்தனர். சிலர் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மூலமாகவும் முத்தலாக் கூறி விவாகரத்து பெற்று வந்தனர். இந்த நடைமுறையால் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதால் இதனை ரத்து செய்யுமாறு பல தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ’முத்தலாக்’ நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் முத்தலாக் ஒரு குற்றமாக மாறியது குறிப்பிடத்தக்கது.