இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்!

இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தர்மபூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்!
Dharampur bus stand flooded
இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேருந்து நிலையம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதுடன், ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தால் மூழ்கிய தர்மபூர் நகரம்

கடந்த சில வாரங்களாக இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. குறிப்பாக, நேற்று இரவு முழுவதும் மண்டியில் பெய்த இடைவிடாத கனமழையால், சோன்காட் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நதிக்கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

தர்மபூர் நகரம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பேருந்து நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், அது முழுமையாக மூழ்கியது. அரசுப் பேருந்துகள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், வீடுகள், கடைகள், மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

நிலச்சரிவு மற்றும் மீட்புப் பணிகள்

மஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒரு நபரைக் காணவில்லை என்றும், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழையால் கடுமையாகச் சேதமடைந்த ஒரு மாணவர் விடுதிக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டிடங்களின் கூரைகளுக்குச் சென்று பாதுகாப்பாக உயிர்தப்பினர்.

மழை பாதிப்புகளை அறிந்த பேரிடர் குழுவினரும், உள்ளூர் போலீசாரும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 404 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.