இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
Fire breaks out on Air India flight
ஹாங்காங்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI 315, இன்று மாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் ஓடுபாதையில் இருந்து கேட் பகுதிக்கு வந்த நிலையில், பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்த போது, விமானத்தின் வால் பகுதியில் உள்ள துணை மின் அலகில் (APU) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் விமானத்தின் சில பாகங்கள் லேசான சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தத் தீ விபத்து தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் தரையிறங்கிய பின்னரே இந்தத் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களில் நேற்று கோளாறு ஏற்பட்டது. கொல்கத்தா நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதை ரத்து செய்ய வேண்டியதாயிற்று.

மற்றொரு சம்பவத்தில், கொச்சியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் AI2744, மும்பை விமான நிலையத்தில் பலத்த மழையில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகியது.

சமீப காலமாக விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் விமானத்தில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர்.