இந்தியா

சிறை அதிகாரி மீது தாக்குதல்: கைதிகள் தப்பியோட்டம்; 24 மணிநேரத்தில் மீண்டும் கைது!

ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

சிறை அதிகாரி மீது தாக்குதல்: கைதிகள் தப்பியோட்டம்; 24 மணிநேரத்தில் மீண்டும் கைது!
Attack on prison officer
ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம் கிளைச் சிறையிலிருந்து தப்பியோடிய இரண்டு நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகள், உள்ளூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

சிறை அதிகாரி மீது தாக்குதல்

கடந்த 5 ஆம் தேதி அன்று, நக்கா ரவி குமார் (30) மற்றும் பெஜவாடா ராமு (26) ஆகிய இரண்டு கைதிகள், சிறை அதிகாரி வாச வீரராஜுவை இரும்பு சுத்தியலால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடமிருந்த சாவிகளையும், ஒரு மொபைல் போனையும் பறித்துக்கொண்டு சிறை வளாகத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

விரைந்து செயல்பட்ட காவல்துறை

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அனகப்பள்ளி மாவட்ட காவல்துறையினர், மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். காவல்துறையின் இந்த முயற்சி அடுத்த நாள் மாலை பலனளித்தது. விசாகப்பட்டினம் நகர அதிரடிப்படை காவல்துறையினர், விசாகப்பட்டினத்தில் உள்ள கொல்லலாப்பாளையம் சந்திப்பு அருகே தப்பியோடிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த திருடப்பட்ட மொபைல் போனும் மீட்கப்பட்டுள்ளது.

கைதிகள் தப்பியோட்டம்- எஸ்பி விளக்கம்

இந்தச் சம்பவம் குறித்து அனகப்பள்ளி காவல்துறை கண்காணிப்பாளர் துஹின் சின்ஹா கூறுகையில், “இந்த இரண்டு கைதிகளும் சிறையை உடைத்து தப்பி செல்ல முக்கிய காரணம், யேகா சுவாமி (26) என்ற மற்றொரு கைதியின் தூண்டுதல்தான். ரவி குமார் மற்றும் ராமு இருவருக்கும் ஜாமீன் கிடைத்தும், ஜாமீன் உத்தரவாதம் அளிக்க ஆள் இல்லாததால் சிறையிலிருந்து வெளியேற முடியவில்லை. மேலும், அவர்களுக்கு தலைமை வார்டன் வீரராஜு மீது நீண்டகாலமாக இருந்த விரோதமும் ஒரு காரணம்” என்று அவர் தெரிவித்தார்.

சோடவரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்த இந்த இரண்டு கைதிகளும், தற்போது மீண்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறை உடைப்புச் சதித்திட்டத்தில் முக்கியக் குற்றவாளியாக யேகா சுவாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.