தப்பியோடிய மலையாள நடிகர்
நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ' குட் பேட் அக்லி' படத்தில் நடித்து இருந்தவர் மலையாள பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொல்லை புகார் தெரிவித்து இருந்தார்.இது மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் டாம் சாக்கோ மீது போதைப்பொருள் பயன்படுத்தியது, அதனை தூண்டியது மற்றும் கிரிமினல் சதி செய்ததாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரிக்க போலீசார் சென்றனர்.
ஆனால், போலீசை பார்த்ததும் சாக்கோ ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் குதித்து அங்கிருந்து நீச்சல் குளத்தில் தாவி படிக்கட்டு வழியாக தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
உண்மையை ஒப்புக்கொண்டார்
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சாக்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.இதன்படி இன்று அவர் தனது வழக்கறிஞர்களுடன் வந்து விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 32 கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்களது கேள்விக்கு பதில் அளித்த நடிகர், போலீசார் சோதனை இட வந்தது தெரியாது எனவும் வேறு ஏதோ ஒரு கும்பல் தன்னை தாக்குவதற்கு முயற்சிப்பதாக எண்ணி தப்பி ஓடியதாகவும் கூறி சமாளிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். போதைப்பொருள் வியாபாரியான சஜீர் என்பவர் அங்கு வந்ததும் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் இவர் பரிமாற்றம் செய்ததும், அவரது செல்போனில் காணப்பட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பு அன்றைய தினம் இருந்தது என்பதை உறுதி செய்து தொடர்ந்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நடிகர் ஷைன் டோம் சாக்கோ உண்மையை ஒப்புக்கொண்டார்.
கைது நடவடிக்கை
அன்றைய தினம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சம்மதித்தார்.அதைத் தொடர்ந்து அவர் மீது என்பிடிஎஸ் பிரிவு 27, 29ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.