சினிமா

அவதூறு பரப்பும் யூடியூபர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும்- நடிகர் வடிவேலு

"அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.

அவதூறு பரப்பும் யூடியூபர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும்- நடிகர் வடிவேலு
Actor Vadivelu
நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு, யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் படம் குறித்து விமர்சனம் செய்பவர்களை கடுமையாகச் சாடினார்.

பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வுகள்

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதுடன், தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

"திரைத்துறைக்கு வெளியே.."

கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு, "நமக்குள் ஒற்றுமை வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்னக் கலைஞர்கள் என்று பார்க்காமல், யூடியூப் சேனல்களை வைத்துக் கொண்டு நம் கலைஞர்களைத் தவறாகப் பேசி, சிறிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி விடுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "இன்னும் நிறைய யூடியூபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீக்கிரமாக நடிகர் சங்கத்தின் சார்பில் 'ஆப்பு வைக்க வேண்டும்'. இந்தப் படத்தைப் பற்றி பேசு, அந்தப் படத்தைப் பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலரின் தூண்டுதலால் இதைச் செய்கிறார்கள். இதற்கு நடிகர் சங்கத்திலும் சிலர் உடந்தையாக இருக்கிறார்கள். இதுபோலப் பேசி வருபவர்களைப் போர்க்கால அடிப்படையில் ஒழித்துக்கட்ட வேண்டும். நடிகர் சங்கம் என்பது நடிகர்களைப் பாதுகாப்பது தான்" என்று பேசினார்.

"திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே விமர்சனம் எடுக்கிறார்கள். சினிமாவை 10 பேர் சேர்ந்து அழித்து வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.