சினிமா

Maareesan: வடிவேலு- பஹத் கூட்டணியின் ட்ராவலிங் திரில்லருக்கு ரெடியா?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படமானது வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Maareesan: வடிவேலு- பஹத் கூட்டணியின் ட்ராவலிங் திரில்லருக்கு ரெடியா?
Vadivelu Maareesan movie set to hit the screens on upcoming 25th July
தமிழ் திரையுலகின் வைகைப்புயல் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்' திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது.

டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பு:

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வடிவேலு பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், உணர்ச்சி பொங்கும் எமோஷனல் நிறைந்த கதாபாத்திரங்களிலும் பின்னி பெடல் எடுப்பார் என்பது ஊர் அறிந்ததே. தனது இரண்டாவது இன்னிங்ஸில் மாமன்னன் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில், வடிவேலுவினை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டியுள்ளது மாரீசன் திரைப்படத்தின் டீசர்.

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? என வழக்கம் போல டீசரில் கண் அசைவில் கூட க்ளாப்ஸ் அள்ளுகிறார் மலையாள நடிகர் பஹத் பாசில். பழைய பாடல் ஒன்றுடன் தொடங்கும் டீசர், ஒரு த்ரில்லரை நோக்கி முடிகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்பினை நிச்சயம் மாரீசன் படத்தின் டீசர் இரட்டிப்பாகியுள்ளது என்றால் மிகையல்ல. தற்போது வரை இப்படத்தின் டீசரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளார்கள்.

மாரீசன் டீசர் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ள நிலையில், மாரீசன் திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான டீசரில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பதாலும், படத்திற்கு ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.