சினிமா

கோட்டா சீனிவாச ராவ் மறைவு.. கண்ணீர் மல்க பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சீரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கோட்டா சீனிவாச ராவ் மறைவு.. கண்ணீர் மல்க பிரபலங்கள் அஞ்சலி!
Veteran Actor Kota Srinivasa Rao Passes Away; Celebrities Pay Tributes
விக்ரம் நடித்த சாமி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கோட்டா சீனிவாச ராவ் இன்று காலை காலமான நிலையில் அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

750 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர்:

அப்படத்தில் இவரது வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. திருப்பாச்சி, குத்து, ஜோர், பரமசிவன், ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட கோட்டா சீனிவாச ராவ், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது. அதன் பின் கடுமையான உடல் நல பாதிப்பால் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிப்பு:

பத்மஸ்ரீ விருது பெற்ற சீனிவாச ராவ், 1999 மற்றும் 2004 க்கு இடையிலான காலத்தில் ஆந்திராவின் விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சீரஞ்சீவி, பிரகாஷ் ராஜ், முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, தெலுங்கானா பாஜக தலைவர் என்.ராம்சந்தர் ராவ், ஆந்திர பாஜக தலைவர் பி.வி.என். மாதவ் ஆகியோரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.