சினிமா

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம் பெண் மருத்துவர்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், பிரபல ராப் இசை கலைஞராக அறியப்படும் வேடன் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம் பெண் மருத்துவர்!
Rape Case Registered Against Popular Kerala Rapper Vedan; Young Doctor Files Complaint
கேரளாவில் ராப் இசையால் இளைஞர்களைத் தன்வசம் ஈர்த்து வந்த பிரபல இசை கலைஞரான வேடன் (ஹிரந்தாஸ் முரளி) மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் மாவட்டத்திற்குட்பட்ட திருக்காக்கரை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வேடன் என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளியின் தந்தை கேரளாவை சேர்ந்தவர். தாய் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஆவார். 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், யூடியூபில் வெளியான இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் பரவலான கவனம் பெற்றார். "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் அழுத்தமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து, 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற சில படங்களிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதிப் பாடியதும் குறிப்பிடத்தக்கது.

தனது ராப் இசைப் பாடல்களை இவரே எழுதி பல மேடைகளில் பாடி, கேரளாவில் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களை வசீகரித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை இவர் மீது திருக்காக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை புகார் விவரம்:

கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், வேடன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துப் பலமுறை உடலுறவு மேற்கொண்டதாக கூறியுள்ளார். ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை திருக்காக்கரை உட்பட பல்வேறு இடங்களில் வேடன் தன்னுடன் உறவு வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பெண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வேடன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) (n) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திய பின் வேடன் திருமணம் செய்ய மறுத்ததாகவும், அதனால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், சமூகத்தின் முன்னால் அவமானம் ஏற்படும் என அஞ்சியதால் முன்னதாகப் புகார் அளிக்கவில்லை என்றும் அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகி நண்பர்களாகிய நிலையில், கோழிக்கோட்டில் உள்ள வேடனின் குடியிருப்புக்கு தன்னை வரவழைத்துப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளார். வேடன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்னரும் சில சட்டச் சிக்கல்களில் சிக்கியுள்ளார்.

--> கஞ்சா வழக்கு: கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இரவு, கொச்சி அருகே கனியம்புழா பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் ஆறு கிராம் உயர்ரக கஞ்சாவுடன் வேடனைப் போலீசார் கைது செய்தனர். பின்னர், காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
-->வனவிலங்குப் பொருள் வழக்கு: கஞ்சா வழக்கை அடுத்து, வனத்துறையினரால் வேடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சிறுத்தைப் பல் பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குப் பொருட்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், பெரும்பாவூர் நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் பேரில் வேடன் இரண்டு நாட்கள் வனத்துறை காவலில் வைக்கப்பட்டார்.
-->'மீ டூ' புகார்: 2021 ஆம் ஆண்டு வேடனின் ஆல்பம் தயாரிப்புக்கிடையே அவருக்கு எதிராக 'மீ டூ' பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. அப்போது, தனது தவறை ஒப்புக்கொண்ட வேடன் அதற்குப் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

தற்போதுள்ள பாலியல் பலாத்கார வழக்கு, வேடனின் பொது வாழ்க்கையிலும், கலைத் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.