Rajinikanth Movie Lal Salaam OTT Release News Fake : ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லைகா பேனரில் இரண்டு படங்களில் கமிட்டானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில் ஒரு படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, அது லால் சலாம் என்ற டைட்டிலில் உருவானது. அதன்படி, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, ரஜினி கேமியோவாக நடித்தார். முக்கியமாக ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற மும்பை டான் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதேபோல், ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் மட்டுமின்றி, செந்தில், தான்யா பாலகிருஷ்ணன், கெஸ்ட் ரோலில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் லால் சலாம் படத்துக்கு இசையமைத்தார். இதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவிருந்த லால் சலாம், கடைசி நேரத்தில் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, பிப்ரவரியில் ரிலீஸான லால் சலாம் எதிர்பார்த்தளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தின் ஃபுட்டேஜ்கள் இருந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக இயக்குநர் ஐஸ்வர்யாவே அறிவித்திருந்தார். இதனால் கடைசி நேரத்தில் சில காட்சிகளை ரீ-ஷூட் செய்து தான் லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்தனர். அதேபோல், ரஜினிக்கு மொத்தமே 20 நிமிடங்கள் தான் காட்சி இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அதிலும் மாற்றங்கள் செய்த ஐஸ்வர்யா, ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ரஜினி இருக்கும் காட்சிகளை இடம்பெற வைத்தார்.
அப்படியாவது லால் சலாம் ஹிட்டாகும் என எதிர்பார்த்த ஐஸ்வர்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விளையாட்டை பின்னணியாக வைத்து நடக்கும் மத அரசியலை விமர்சிக்கும் விதமாக லால் சலாம் உருவாகியிருந்தது. தற்போதைய காலக்கட்டத்துக்கு இது தரமான கண்டெண்ட்டாக இருந்தும் லால் சலாம் கவனம் பெறாமல் போனது. அதிலும் ரஜினி கேங்ஸ்டராக நடித்திருந்தும் ரசிகர்கள் கண்டுகொள்ளவே இல்லை. லால் சலாம் மத அரசியல் குறித்து விமர்சித்து உருவாகியிருந்ததால், ஒருகட்டத்தில் இந்தப் படத்துக்கு எதிராக சதி வேலைகள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அதனால் தான் படத்தை ஓடிடியிலும் வெளியிட முடியாமல் படக்குழு திணறி வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்துக்கே இப்படியொரு நிலையா? என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், பல சோதனைகளுக்குப் பின் லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தற்போது ஒரு போஸ்டர் வைரலானது. அதாவது லால் சலாம் திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்தது. நெட்பிளிக்ஸிடம் இருந்த லால் சலாம் ஓடிடி உரிமையை, சன் நெக்ஸ்ட் வாங்கிட்டதாகவும், செப்டம்பர் 20ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் எனவும் சொல்லப்பட்டது.
மேலும் படிக்க - விஜய்யின் தவெக கொடி.. யானை தான் இப்ப பிரச்சினையா..?
ஆனால், அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. லால் சலாம் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து வெளியான அப்டேட், ஃபேன்மேட் போஸ்டர் எனவும், படக்குழு தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் லால் சலாம் படத்தை ஓடிடியில் எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.