சினிமா

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.

பத்மபூஷன் அஜித்!  சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!
படிப்பில் அதிக ஆர்வம் காட்டாத அஜித், சின்ன வயதிலேயே 6 மாதங்கள் வரை பைக் மெக்கானிக்காக வேலை பார்க்க, அங்கிருந்து தொடங்கியது அவரது ரேஸ் மோகம். பைக் மெக்கானிக், கார்மெண்ட்ஸ் பிஸினஸ் என சுற்றிக்கொண்டிருந்த அஜித், மாடலிங்கில் ஈடுபட்டிருந்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாக, அதன்பின்னர் எல்லாமே அவர் நினைத்தப்பட நடந்தேறியது.

பல தோல்விகளை கடந்து கோலிவுட்டின் ஸ்டார் ஹீரோவாக உச்சம் தொட்ட அஜித், அதன் பின்னர் தனக்கு பிடித்ததையெல்லாம் செய்யத் தொடங்கினார். முக்கியமாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்த்து விடுவார் அஜித்.

'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் "ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.." என அப்போது முதலமைச்சராக இருந்த முதலமைச்சர் கருணாநிதியிடமே மேடையில் வைத்து முறையிட்டார் அஜித். அதனைக் கேட்ட ரஜினி எழுந்து நின்று கை தட்டியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது முதல் ரஜினியும் அஜித்தும் ரொம்பவே நெருங்கி பழகி வருவதும் பலருக்கும் தெரியாது. தனது 'பில்லா' பட ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தது ரஜினி தான் என்பது பலருக்கும் தெரியாது.

என்னதான் அஜித் பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என விமர்சனங்கள் எழுந்தாலும், துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்துகொள்வது அவரது வழக்கம்.

தீவிரமான சாய்பாபா பக்தரான அஜித், தனது படங்களின் ரிலீஸ் பெரும்பாலும் வியாழக்கிழமை இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதேபோல், கார், பைக் என எந்தப் பொருட்கள் வாங்கினாலும் அதனை சாய் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவாராம்.

சாய்பாபாவுக்குப் பிறகு அஜித்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

உள்ளூர் அரசியல் பற்றி அதிகம் கருத்து சொல்லாத அஜித், உலக அரசியலின் இன்றைய நிலவரம் பற்றி எந்த நிமிடமும் கேட்டாலும் அதுகுறித்து அவ்வளவு துல்லியமாக பேசுவாராம்.

ரேஸ் போட்டிகளில் அஜித்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி தான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜித்.

புத்தக விரும்பியான அஜித், பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவாராம். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிக்கும் அஜித், வீட்டில் மினி நூலகமே வைத்திருப்பது யாரும் அறியாதது.

அஜித்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது.

உருளைக் கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் அஜித் செம எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் அஜித் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், அவரது நண்பர்கள் நேரில் ஆஜராகி பிரியாணி சமைக்கச் சொல்லி வம்பிழுப்பார்களாம். அஜித்தும் அந்த அன்பு கட்டளையை மறுக்காமல் ருசிருசிக்க சமைத்துக்கொடுப்பாராம்.

உணவு பிரியரான அஜித், எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்.

அதேபோல் போட்டோகிராபியில் அதிக ஆர்வம் கொண்ட அஜித், கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் செய்துவிடும் அளவுக்கு அதில் அப்டேட்டாக இருப்பாராம்.

அஜித்தின் மிக முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது தானாம்.

பைக், கார் ரேஸர் ஆகவேண்டும் என்பது அஜித்தின் வாழ்நாள் ஆசை. அதன்படி அஜித் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்தது பைக் ரேஸில் தான். இதுவரை 12 பைக் ரேஸ்களில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார் அஜித்.

அதேபோல், மெக்கானிக்கர் பார்முலா 1, 2, 3 ஆகியவற்றில் கலந்துகொண்ட உலகின் முதல் நடிகர் அஜித் தான்.

கடந்த 2022ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், அஜித்தின் அணி நான்கு தங்கம், இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று கெத்து காட்டியது.

அதேபோல், இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க அஜித்குமாரின் தக்ஷா குழு தேர்வாகி சாதனை படைத்தது. முக்கியமாக அஜித்தின் குழுவினர் தயாரித்த ட்ரோன், 6 மணி நேரத்துக்கும் அதிகமாக வானில் பறந்து பலரையும் வியக்க வைத்தது.

தற்போது தனது நீண்டநாள் கனவான கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித், சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்து வருகிறார். அஜித் ரேஸிங் டீம் என்ற பெயரில் கார் பந்தயத்தில் களமிறங்கிய அவர், துபாய், ஸ்பெயின் கார் ரேஸ்களில் மூன்றவது இடம் பிடித்தார்.

பெல்ஜியம் நாட்டில் நடத்த ஜிடி4 ஐரோப்பா சீரிஸ் கார் பந்தயத்தில், அஜித் குமாரின் ரேஸிங் அணி இரண்டாம் இடம் பிடித்தது. இப்படி அடுத்தடுத்து கார் ரேஸிலும் கலக்கி வருகிறார் அஜித்.

ஒரே நேரத்தில் சினிமாவிலும், ரியல் லைஃபிலும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித், அதிகம் பயணம் செய்யுங்கள் என அட்வைஸ் செய்கிறார். பயணத்தை விட சிறந்த கல்வி எதுவும் கிடையாது. சாதியும் மதமும் நீங்கள் சந்திக்காத மனிதர்களையும் வெறுக்க வைக்கும். ஆனால், நீங்கள் பயணம் செல்லும் போது பல்வேறு தேசங்களையும் மதங்களையும் சேர்ந்த மனிதர்களுடன் பழகி அவர்களின் கலாச்சாரத்தை அனுபவிக்கும்போது அது உங்களை வேறு வடிவிற்கு மாற்றும் என வாழ்வின் யதார்த்தம் குறித்து சிலாகிக்கிறார்.

பைக்கில் உலகம் சுற்ற நினைப்பவர்களுக்கு உதவ, வீனஸ் மோட்டார்ஸ் சைக்கிள்ஸ் டூர்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார்.

அஜித்தின் இந்த ரியல் ஹீரோயிஷம், தற்போது அவருக்கு பத்மபூஷன் விருதையும் கிடைக்கச் செய்துள்ளது. அதேபோல், அவரது ரசிகர்களை கடந்து பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வியப்பும் பிரமிப்பும் இன்னும் தொடர வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.