சினிமா

'ஆபரேஷன் நும்கோர்' - நடிகர் துல்கர், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிரடிச் சோதனை!

கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 'ஆபரேஷன் நும்கோர்' - நடிகர் துல்கர், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிரடிச் சோதனை!
Customs raids the homes of actors Dulquer and Prithviraj
பூடான் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கேரளாவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் 'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனை, நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரின் வீடுகளும் நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத கார் கடத்தல்

பூடானில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும் பழைய கார்கள், இமாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான ஆவணங்களுடன் ரூ.40 லட்சம் வரை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சட்டவிரோத விற்பனையால் மத்திய அரசுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கடத்தல் கும்பலுக்குப் பின்னணியில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூடான் ராணுவத்தால் கைவிடப்பட்ட சுமார் 150 வாகனங்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 'லேண்ட் குரூசர்', 'பிராடோ' போன்ற சொகுசு கார்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விற்பனையில் நடிகர்கள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

நடிகர்கள் வீடுகளில் சோதனை

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளைத் தேடி வரும் சுங்கத்துறை அதிகாரிகள், அதன் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகளில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். இதேபோல், நடிகர் அமித் சாகலக்கல் வாங்கிய கார் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இடைத்தரகர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தக் கடத்தல் குறித்து கேரள மோட்டார் வாகனத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.