சினிமா

மணிரத்னம் தான் முதலில் Pan india படத்தை இயக்கியவர் – நடிகர் சசிகுமார்

சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நான் Soft ரோல் செய்திருந்தேன் என சசிகுமார் தெரிவித்தார்

மணிரத்னம் தான் முதலில் Pan india படத்தை இயக்கியவர் – நடிகர் சசிகுமார்
நடிகர் சசிகுமார் செய்தியாளர் சந்திப்பு
மக்களுக்கு நன்றிகள்

இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரைப்பட குழுவினரான நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவின் ஆகியோர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களின் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவின், இந்த படத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கு நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். குடும்பத்தினர்களின் கவனத்தை ஈர்த்து விட்டால் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்ததால் முதல் படமாக குடும்பப் படத்தை இயக்கியதாக தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் வரும் சிறுவனின் கதாபாத்திரம் ஒரு விஜய் ரசிகராக வடிவமைத்திருப்பதாகவும், விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டதால் எனவே விஜயின் விஷயங்களை இதில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி சிறுவனின் கதாபாத்திரத்தை வடிவமைத்ததாக தெரிவித்தார்.

எதார்த்தமாக நடித்திருக்கிறார்

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் சசிகுமார், இந்த திரைப்படத்திற்கு காலைக் காட்சியிலேயே குடும்பங்களுடன் வருகை புரிந்து படம் பார்த்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். தற்பொழுது குடும்பங்கள் எல்லாம் ஓடிடி தளங்களில் படத்தை பார்க்கின்றனர். திரையரங்குகளுக்கு குடும்பங்களுடன் வருவதில்லை என்ற பேச்சு தற்பொழுது நிலவி வருவது குடும்பப் படத்தை நாம் (திரைத்துறையினர்) அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், குடும்ப படங்கள் சிறிது காலங்களாக மறைந்திருந்தது என்றும் அது மீண்டும் இந்த திரைப்படம் மூலம் வெளிவருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

திரைப்பட விமர்சனங்கள் கூறும்பொழுது கதைகளை வெளியில் சொல்லிவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். நடிகை சிம்ரன் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் எதார்த்தமாக நடித்திருப்பதாகவும், மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும் கூறினார். தற்பொழுது நடிகர் சூர்யாவின் திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது எங்களது படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம் என தெரிவித்தார். ஒரே சமயத்தில் நான்கைந்து படங்கள் வருவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது எனவும் தெரிவித்தார்.

மணிரத்னம் தான் முதலில் இயக்கியவர்

வரலாற்று கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த வருட இறுதியில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்றார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நான் Soft ரோல் செய்திருந்தேன் எனவும் ஆனால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் தான் பலரது மனதிலும் நினைவிருப்பதாக தெரிவித்தார். Pan India படம் என்று தனியாக எதையும் எடுத்து விட முடியாது. ஒவ்வொரு மொழியிலும் Pan India படங்களை எடுத்துவிட முடியாது என தெரிவித்த அவர், Pan India படங்களை முதலில் ஆரம்பித்ததே தமிழ் சினிமா தான் என்றார். இயக்குநர் மணிரத்னம் தான் Pan India படத்தை முதலிலேயே இயக்கியதாகவும், அவர் இயக்கிய ரோஜா திரைப்படம் Pan India என்றார்.அதற்கு முன்பு வந்த சந்திரலேகா படமும் ஒரு Pan India படம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேசிய திரையரங்கத்தினர், இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பு நன்றாக இருந்ததாகவும், இந்த கோடை விடுமுறையில் அதிகமான திரையரங்குகள் இவர்களால் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்று கூறலாம் என தெரிவித்தார். இந்த படத்தை குடும்பத்துடன் பலரும் வந்து மகிழ்ச்சியுடன் பார்த்து செல்வதாகவும் நன்றாக ஓடி வருவதாகவும் தெரிவித்தார்.