சினிமா

படத்தலைப்பில் சிறு மாற்றம்.. முடிவுக்கு வரும் ’ஜானகி’ பெயர் விவகாரம்

மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. படத்தின் தலைப்பில் சிறுமாற்றம் செய்ய படக்குழு இசைந்துள்ளது.

படத்தலைப்பில் சிறு மாற்றம்.. முடிவுக்கு வரும் ’ஜானகி’ பெயர் விவகாரம்
Producers ready to change the title to V Janaki vs State of Kerala
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படமான, ‘ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா’ (Janaki v/s State of Kerala) படத்தினை இயக்குநர் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது நீதிமன்ற வழக்குத் தொடர்பான பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒன்லைன், ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கான நீதி நாடி சட்டப் போரட்டத்தினை மேற்கொள்கிறார். அவருக்கு சுரேஷ் கோபி மூத்த வழக்கறிஞராக வாதாடுகிறார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஜானகி என பெயர் வைத்துள்ளதற்கு CBFC எதிர்ப்பு தெரிவித்தது. படத்தின் பெயரையும், படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜானகியின் பெயரையும் மாற்றினால் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க CBFC தயாராக இருக்கிறது என கூறியது.

இப்படம் முதலில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையில் வெளியிட திட்டமிடப்பட்டது. படத்திற்கு தணிக்கைக் குழு சன்றிதழ் தர மறுத்ததால், படத்தின் வெளியீடு ஜூன் 27 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அன்றும் CBFC-யுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் படம் திரையில் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

CBFC கூறும் விளக்கம் என்ன?

வழக்கின் விசாரணையின் போது, CBFC தலைமை நிர்வாக அதிகாரி ( மும்பை ) ராஜேந்திர சிங் சமர்ப்பித்த எதிர் பிரமாணப் பத்திரத்தில் , “படத்தில், சீதா/ஜானகியின் பெயரிடப்பட்ட முன்னணி கதாபாத்திரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது, ​​ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுகிறார். நீதிமன்ற காட்சிகளின் போது மற்றொரு மத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குறுக்கு விசாரணை செய்து வேதனையான சில கேள்விகளைக் கேட்கிறார்.

சீதா தேவியின் புனிதப் பெயரைக் கொண்ட கதாபாத்திரத்தை இவ்வாறு காட்சியமைத்திருப்பது, மதக் குழுக்களிடையே பிளவுகளை உண்டாக்கலாம். இந்தியா முழுவதும் சீதா தேவிக்கு அளிக்கப்படும் மரியாதையினை கருத்தில் கொண்டு, இந்த மத ரீதியாகக் கூறப்படும் துணைக் கதைகள் பொது அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பில் சிறு மாற்றம்:

இன்றைய தினம் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் சென்சார் வாரியம் இடையே ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் தலைப்பை 'வி ஜானகி v/s கேரள மாநிலம்' (V Janaki v/s State of Kerala) என்று மாற்றவும், ஜானகி என்ற பெயரை இரண்டு இடங்களில் ம்யூட் செய்ய தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்கள் தலைப்பை 'ஜானகி' என்பதிலிருந்து 'வி ஜானகி' என்று மாற்ற ஒப்புக்கொண்டால், படத்திற்கு திரையிடல் சான்றிதழை வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நீதிபதி என். நாகரேஷின் தனி நீதிபதி அமர்வு இடைக்கால உத்தரவில், தயாரிப்பாளர்கள் திருத்தப்பட்ட பதிப்பை CBFC முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குள் சான்றிதழ் வழங்குமாறும் கூறப்பட்டிருந்தது.

பிரச்னை கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், படத்தினை வருகிற ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படத்தயாரிப்புக்குழு திட்டமிட்டுள்ளது.