சினிமா

"இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை.." 'துரந்தர்' படத்தை புகழ்ந்த விராட் கோலி!

'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


Virat Kohli
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்து வரும் 'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கன்னா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவென்ஞ்ச்', தற்போது பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. 3 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ. 1,501 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வியந்து பாராட்டிய விராட் கோலி

இந்தப் படத்தைப் பார்த்த இந்திய வீரர் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. கிட்டத்தட்ட 4 மணிநேரம் ஓடும் இந்தப் படத்தில் ஒரு நொடி கூட என்னால் அசைய முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மற்றும் ரன்வீர் சிங்கிற்குப் புகழாரம்

இயக்குநர் ஆதித்யா தாரை 'ஜீனியஸ்' எனப் புகழ்ந்துள்ள கோலி, ரன்வீர் சிங்கின் நடிப்பு அற்புதத்திற்கும் அப்பாற்பட்டது என்றும், இந்தப் படத்திற்குப் பிறகு அவரது கலைப்பயணம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதாகவும் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் தற்போது இந்தியத் திரையுலகையே அதிர வைத்துள்ளது.