சினிமா

மாதம்பட்டி ரங்கராஜ் DNA பரிசோதனை: நீதிமன்றத்தில் சீல் வைத்த கவர் சமர்ப்பிப்பு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான வழக்கில், மரபணு (DNA) பரிசோதனை முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் DNA பரிசோதனை: நீதிமன்றத்தில் சீல் வைத்த கவர் சமர்ப்பிப்பு!
Madampatti Rangaraj
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான வழக்கில், மரபணு (DNA) பரிசோதனை முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுகளில் 'மாதம்பட்டி பாகசாலா' நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டிருந்ததால், அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தைத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மரபணு பரிசோதனை பின்னணி

தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பதை நிரூபிக்க அவருக்கு மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்தார். இதற்கு ரங்கராஜ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.

நீதிமன்றத்தில் அறிக்கை

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் முக்கியத் தகவலைத் தெரிவித்தார். ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட உறை மத்தியஸ்தர் நீதிபதி பி.என்.பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.