சினிமா

உலகின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியீடு..சொத்து மதிப்பு என்ன?

உலகளவில் நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் டாப் 10 பணக்கார நடிகர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது Esquire.

உலகின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியீடு..சொத்து மதிப்பு என்ன?
திரையுலகம் ஒரு மாயை. அதில் வெற்றிப் பெற்றுவிட்டால், கனவிலும் எட்ட இயலாத அளவிற்கான புகழையும், பொருளையும் பெற முடியும். அதேப்போல் பெற்ற மொத்தத்தையும் இழக்க ஒரு தோல்வி போதும். இந்த துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களின் சம்பளங்களின் எண்ணிக்கை தொடக்கமே கோடி ரூபாயில் தான் தொடங்கும்.

திரைத்துறையில் பெறும் சம்பளத்தினை தாண்டி, அவர்களின் முதலீடு, மற்ற வணிக பிசின்ஸ், பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில் உலகின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது எஸ்குயர் (Esquire). யாரெல்லாம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை இங்கு காணலாம்.

10.ஜாக்கி சான்:

$557.09 மில்லியன் நிகர சொத்து மதிப்புடன், ஜாக்கி சான் உலகின் பணக்கார நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவை படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ஜாக்கி சான் திகழ்கிறார்.

09.டாம் ஹாங்க்ஸ்:

$571.94 மில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 9-வது இடத்தினை பிடித்துள்ளார், டாம் ஹாங்க்ஸ். இவர் நடித்திருந்தாலே அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் உள்ளது. ஆஸ்கர் விருதினை வென்ற டாம் ஹாங்க்ஸ் இந்த பட்டியலில் இடம் பெற அவர் பெறும் சம்பளம் மட்டும் காரணம் அல்ல. இவர் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளதன் மூலம் சுமார் $225 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளார்.

08. ஜாக் நிக்கல்சன்:

$590 மில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளார் ஜாக் நிக்கல்சன். துணை கதாபாத்திரங்களில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ளார்.

07. பிராட் பிட்:

$594.23 மில்லியன் நிகர மதிப்புடன் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 07 இடத்தை பிடித்துள்ளார் பிராட் பிட். படங்களில் நடிக்க பெரும் தொகையினை சம்பளமாக பெற்று வரும் பிராட் பிட், தற்போது நடித்து வரும் ஃபார்முலா 1 திரைப்படத்திற்காக மட்டும் முன்பணமாக $45 மில்லியன் டாலர் பெற்றுள்ளார் என்கிற தகவல் வெளியாகியது. இவர் தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் அனிஸ்டனுடன் இணைந்து பிளான் பி என்டர்டெயின்மென்ட் என்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் தி டிபார்ட்டட் , மூன்லைட் மற்றும் 12 இயர்ஸ் எ ஸ்லேவ் போன்ற பல அகாடமி விருது பெற்ற படங்களைத் தயாரித்துள்ளது. நடிப்பு தாண்டி தயாரிப்பிலும் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார்.

06.ராபர்ட் டி நீரோ:

உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ராபர்ட் டி நீரோ படங்களை தாண்டி தொழில் வாழ்வில் நல்ல வருமானத்தை பார்த்து வருகிறார். பிரபல உணவகச் சங்கிலியான நோபுவை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். உணவகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் அதிக முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வரும் ராபர்ட் டி நீரோவின் நிகர சொத்துமதிப்பு $735.35 மில்லியன் டாலர் ஆகும்.
Image

05.ஜார்ஜ் குளூனி:

தற்போது தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஜார்ஜ் குளூனியின் நிகர சொத்து மதிப்பு $742.8 மில்லியன். திரைத்துறை தாண்டி தொழில்முறையில் தான் நல்ல வருமானம் ஈட்டுகிறார். புகழ்பெற்ற காசாமிகோஸ் (Casamigos) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்ஜ் குளூனி. இந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அதன மூலம் மற்ற துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார் ஜார்ஜ் குளூனி

04. ஷாருக்கான்:

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான். இவருடைய நிகர சொத்து மதிப்பு $876.5 மில்லியன் டாலர். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராக விளங்கும் ஷாருக்கான், படத்தயாரிப்பு மூலமும் நல்ல வருமானம் காண்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் போன்ற திரைப்படங்கள் உலகளவில் ரூ.2,000 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் லீக்குகளில் சொந்தமாக சில அணிகள் இவரது வசம் உள்ளன. திரைத்துறை தாண்டி பல பிசினஸ்களில் இவர் முதலீடு செய்துள்ளார்.

03. டாம் குரூஸ்:

திரைத்துறை மூலம் மட்டுமே அதிகம் சம்பாதிக்கும் நடிகராக டாம் குரூஸ் திகழ்கிறார். இவரது மிஷன்-இம்பாசிபிள் மற்றும் டாப் கன் போன்ற திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சத்தை தொட்டது. வட அமெரிக்கா பகுதிகளில் ரியல் எஸ்டேட் சார்ந்து அதிக முதலீடு செய்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு $891 மில்லியன்.

02. டுவைன் 'தி ராக்' ஜான்சன்

WWE -மூலம் புகழ்பெற்ற தி ராக், ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரது உடலமைப்புக்காகவே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவரது நிகர சொத்து மதிப்பு 1.19 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. திரைத்துறை,மல்யுத்தம் தாண்டி சில முன்னணி நிறுவனங்களின் முக்கிய பங்குதாரராகவும் விளங்குகிறார்.

Image

01. அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்

$1.49 பில்லியன் நிகர சொத்து மதிப்புள்ள அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் பற்றி தனி அறிமுகம் தேவையில்லை. ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்ட் பாடி பில்டர், நடிகர்,அரசியல்வாதி,தொழில்முனைவோர் என பன்முகங்களை கொண்டவராக திகழ்கிறார். பில்லியனர் பட்டியலில் அர்னால்ட் இடம்பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றில் ஐந்து சதவீத பங்குகள் அர்னால்ட் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

(அனைத்து புள்ளிவிவரங்களும் பிப்ரவரி, 2025 நிலவரப்படி துல்லியமானவை)