சினிமா

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
Case Against Madhampatti Rangaraj
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணியும் புகாரும்

கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது முறையாகத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி விசாரணை கோரும் மனு

இந்த நிலையில், இந்த வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறை விசாரணையில் பாரபட்சம் இருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவின்கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தான் அளித்த புகாரில் மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்துதல், கருச்சிதைவை ஏற்படுத்துதல், மின்னணுப் பதிவுகளை அழித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளைக் குறிப்பிட்டிருந்தும், அதன்படி காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றும், கடந்த ஒன்றரை மாதமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது காவல்துறையின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், தாம் மகளிர் ஆணையத்தில் புகார் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பிரபல சமையல் கலைஞர் என்பதனால், முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மற்றும் மூத்த அதிகாரிகளின் குடும்பத் திருமண நிகழ்வுகளில் இவரது கேட்டரிங் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே காவல்துறை பாரபட்சமாக விசாரணை நடத்துவதாகவும், விசாரணை நம்பகத்தன்மையுடன் நடைபெறவில்லை என்றும் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கைச் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்குப் பதிலளிக்கக் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி வழக்கை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். அன்று காவல்துறை தனது பதிலைத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.