சினிமா

வருங்கால கணவரை அறிமுகம் செய்த நடிகை தான்யா.. யார் தெரியுமா?

நடிகை தான்யா, ஒளிப்பதிவாளர் கௌதமுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

வருங்கால கணவரை அறிமுகம் செய்த நடிகை தான்யா.. யார் தெரியுமா?
Actress Tanya introduced her future husband
பழம்பெரும் நடிகர் மறைந்த ரவிச்சந்திரனின் பேத்தியும், 'பலே வெள்ளையத்தேவா', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை தான்யா ரவிச்சந்திரன், தனது காதலரும் ஒளிப்பதிவாளருமான கௌதமுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவித்துள்ளார். காதலருடன் லிப் லாக் முத்தம் கொடுத்தபடி உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

நடிகை தான்யாவின் திரைப்பயணம்

நடிகை தான்யா 'பலே வெள்ளையத்தேவா', 'கருப்பன்' போன்ற படங்களில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இயக்குநர் ராதா மோகனின் 'பிருந்தாவனம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தான்யா. ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்னரே சசிகுமாருடன் இவர் நடித்த 'பலே வெள்ளையத்தேவா' வெளியானது.

இந்த படங்களைத் தொடர்ந்து 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். நல்ல படங்களில் நடித்து பெயர் பெற்றாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தான்யாவுக்கு சற்று குறைவாகவே இருக்கிறது. கிடைக்கும் ஒரு சில நல்ல கதை கொண்ட படங்களில் நடித்து வரும் தான்யா, சமீபத்தில் அர்ஜுன் தாஸுடன் 'ரசவாதி' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் 'ரெக்கை முளைத்தேன்', 'ரெட்ட தல' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

காதலன் கௌதம் யார்?

தான்யா காதலிக்கும் ஒளிப்பதிவாளர் கௌதமின் உண்மையான பெயர் கௌதம் ஜார்ஜ். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமின் மாணவர். ஷங்கரின் 'ஐ' உள்ளிட்ட படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள கௌதம், விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி', பாவனாவின் 'தி டோர்', ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளராகவும் கெளதம் பணியாற்றி வருகிறார். இருவரும் திருமண தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், காதலை உறுதிப்படுத்தி அறிவித்துள்ளதால் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.