சினிமா

சொன்னதை செய்த நடிகர் சூரி.. தாய்மாமனாக சீர் வரிசை வழங்கி அசத்தல்!

தனியார் நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூரி, நடன கலைஞர் பஞ்சமியிடம் உங்களது பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளார்.

சொன்னதை செய்த நடிகர் சூரி.. தாய்மாமனாக சீர் வரிசை வழங்கி அசத்தல்!
Actor Soori fulfilled his promise to private show dancer Panchami
குடும்பப் பின்னணியிலான கதையினை கொண்ட “மாமன்” படம் கடந்த மே 16 ஆம் தேதி திரையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாமன் படத்தின் கதாநாயகன் பட ப்ரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

அந்த வகையில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி, அதில் சிறப்பாக நடனமாடிய பஞ்சமி நாயகியிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? காதணி விழா செய்துவிட்டீர்களா? என சூரி கேட்டார். அதற்கு இல்லை என பஞ்சமி கூறவே உங்கள் பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என நிகழ்ச்சி மேடையில் தெரிவித்திருந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சமி நாயகி-மணிகண்டன் தம்பதியருக்கு தர்ஷித்,அசோகமித்ரன்,ஆதித்யா வர்மா என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இன்று காதணி விழா நடைபெற்றது.

வாக்குறுதி அளித்தாவறே, நடிகர் சூரி இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். குழந்தைகளை தாய்மாமன் மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் வரையில் நடிகர் சூரி உடனிருந்தார். பிறகு குழந்தைகளுக்கு புது துணிகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாமன் திரைப்பட இயக்குனர் பிரசாந்த், நடிகர் சூரி, குழந்தையின் தாய்மாமன் கலைத் தென்றல் என மூவர் மடியிலும் குழந்தைகளை அமர வைத்து காது குத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் எதுவும் நான் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை எனத் தெரிவித்தார். மேலும் அரசியல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, விஜய்-உதயநிதி இருவரும் எனக்கு வேண்டியவர்கள் தான் என பதிலளித்தார் நடிகர் சூரி.

திரையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன் திரைப்படத்தினை விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நடிகர் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்‌ஷிமி, சுவாஸ்திகா, பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹீசாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

விசாரணை, கருடன் படங்களை தொடர்ந்து மாமன் படத்திலும் கதையின் நாயகனாக நடிகர் சூரி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைப்பெற்ற நிகழ்வில் மாமன் படத்தில் நடித்த திரையுலக பிரபலங்களும், பஞ்சமியின் உறவினர்களும் திரளாக பங்கேற்றதால் காதணி விழா களைக்கட்டியது.