சினிமா

அருண் விஜய்காக களமிறங்கும் தனுஷ்.. ’ரெட்ட தல’ புதிய அப்டேட்

அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அருண் விஜய்காக களமிறங்கும் தனுஷ்.. ’ரெட்ட தல’ புதிய அப்டேட்
தனுஷ்-அருண் விஜய்




இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து, இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். அருண் விஜய்யின் 36-வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

’ரெட்ட தல’ திரைப்படத்தில் சித்தி இதானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘ரெட்ட தல’ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாகவே, தனுஷ் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இப்படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் அருண் விஜய் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.