சினிமா

1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம்.. சேரனின் இயக்கத்தில் ராமதாஸ் பயோபிக்!

தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம்.. சேரனின் இயக்கத்தில் ராமதாஸ் பயோபிக்!
PMK Founder Ramadoss's Life Story Comes to Screen
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 86-வது பிறந்தநாளினை கொண்டாடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள நிலையில், பாமகவின் தொண்டர்களும் ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்னை தீராத நிலையில் பாமகவின் தொண்டர்கள் சோகத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ள நிலையில் அவர்களுக்கு சர்ப்பரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் சேரன்.

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு “அய்யா” என்கிற திரைப்படத்தினை சேரன் இயக்கவுள்ளதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் குமரன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் வெற்றியாளரும், நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற நடிகர் ஆரி, ராமதாஸின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி,பொம்மை நாயகி, ஐரா போன்ற படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்க உள்ளார். படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1987-ல் நடந்த போராட்டம்:

மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராமதாஸ், வன்னியர் சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் காண வேண்டும் என்கிற நோக்கில், அப்போது தமிழகத்தில் ஆங்காங்கே இருந்த வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் விளைவாக 1980-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி 28 வன்னியர் சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து ’வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கினார். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் வன்னியர் சமுதயாத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

வட மாவட்டங்களில் இந்த போராட்டம் வேகமெடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த, தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 21 பேர் மரணமடைந்தனர். ராமதாஸ் உட்பட போராட்டத்தில் ஈடுபட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடந்துக் கொண்டிருந்தது எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் உடல்நல பிரச்சினைக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர், போராட்டக்குழுவுடன் பேசினார். கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர் காலமானார். இதன்பின் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக இருந்த கருணாநிதி, வன்னியர் சமுதாயம் உட்பட 108 சமுதாயங்களை ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

தற்போது வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களுக்கு வழங்கப்படும் 20% தனி இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு மட்டும் 10.5% தனி உள் ஒதுக்கீடு வழங்குமாறு பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக கொண்டு தான் ராமதாஸின் பயோபிக் படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.