சினிமா

தமிழ் சினிமாவிற்குள் ரிட்டன் வரும் அப்பாஸ்.. ரோல் குறித்து இயக்குநர் கொடுத்த அப்டேட்

காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தமிழ் சினிமாவிற்குள் ரிட்டன் வரும் அப்பாஸ்.. ரோல் குறித்து இயக்குநர் கொடுத்த அப்டேட்
Abbas's Grand Comeback: Fans Rejoice as Actor Teams Up with G.V. Prakash After 10 Years
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் அப்பாஸ். திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை, ஒட்டுமொத்தமாக சினிமாத்துறையிலிருந்து விலகி விட்டார். இந்நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகர் அப்பாஸ்.

நடிகர் அப்பாஸின் நடிப்பில் இறுதியாக திரையில் வெளியான படம் என்றால் 2014 ஆம் ஆண்டு வெளியான ராமானுஜன் படம் தான். தனது ரீ-என்ட்ரியில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவிபிரகாஷூடன் கைக்கோர்க்க உள்ளார் என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்.

கோமாளி, லவ் டூடே போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதனிடம் அஸோசியேட் டைரக்டராக பணிபுரிந்த மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் அறிமுக இயக்குநராக களமிறங்க உள்ளார். இவர் இயக்கும் படத்தில் தான் நடிகர் அப்பாஸ் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக லவ்வர் படத்தின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகிய ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.

பண்ணையாரும் பத்மினியும், டியர் காம்ரேட், ராதேஷ்யாம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பாஸின் ரீ-என்ட்ரி தொடர்பாக இயக்குநர் கூறுகையில், “படமானது நகைச்சுவையுடன் கூடிய பொழுதுபோக்கு படமாக தான் இருக்கும். படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் சார் போன்ற அழகான தோற்றமுடைய ஒரு நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். அதனைத் தொடர்ந்து நடிகர் அப்பாஸினை தொடர்பு கொண்டு பேசினோம்.

படத்தின் கதை அப்பாஸுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்காக கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். அவர் கதாபாத்திரம் குறித்து தற்போது எதுவும் வெளிப்படையாக கூற இயலாது. ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர்கள் என்றாலே வில்லன் போன்ற கதாபாத்திரம் என்று ஒரு பேச்சு இருக்கிறது. இப்படத்தில் அப்பாஸ் சாரினை ஒரு புதிய தோற்றத்தில் நீங்கள் காண்பீர்கள்” என முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் தற்போதைய படப்பிடிப்பில் நடிகர் அப்பாஸ் படக்குழுவுடன் இணைய உள்ளார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.