Breaking news

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
Veteran actress Saroja Devi passed away
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

1955 ஆம் ஆண்டு ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சரோஜா தேவி. அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்தார். இதையடுத்து, இயக்குநர் ஸ்ரீதரனின் ‘கல்யாண பரிசு’ படத்தில் 1959 ஆம் ஆண்டில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய தமிழகத்தின் உச்ச நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இவர் எம்ஜிஆருடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களும் நடித்துள்ளார்.

‘அன்பே வா’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. நடிகை சரோஜா தேவி தமிழ், கன்னடம், உள்ளிட்ட பல மொழி படங்களில் ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. மேலும் இவர் தமிழகத்தின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

நடிகை சரோஜா தேவி கடைசியாக சூர்யா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறை காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார். மேலும் இவரது மறைவிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.