Breaking news

Vice President Election: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

கடந்த ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீரென்று தனது ராஜினாமா முடிவினை அறிவித்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Vice President Election: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
ECI Announces Vice President Poll Dates Following Jagdeep Dhankhar Resignation
இந்தியாவின் 17-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் செயல்பாடுகள் ஆகஸ்ட் 7, 2025 அன்று தொடங்குகின்றன.

துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை கடந்த ஜூலை 21, 2025 அன்று ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2022 ஆகஸ்ட் 11 அன்று இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, மாநிலங்களவையின் தலைவராகவும் (ex-officio Chairman) செயல்பட்டார்.

ஜெகதீப் தன்கர், 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னதாக 1989 முதல் 1991 வரை மக்களவை உறுப்பினராகவும், 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைப்பெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே, ஜெகதீப் தன்கர் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா முடிவினை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியது. இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முக்கிய தேதிகள் பின்வருமாறு:

---> தேர்தல் அறிவிப்பு வெளியீடு: ஆகஸ்ட் 7, 2025 (வியாழக்கிழமை)
---> வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 21, 2025 (வியாழக்கிழமை)
---> வேட்புமனு பரிசீலனை: ஆகஸ்ட் 22, 2025 (வெள்ளிக்கிழமை)
---> வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 25, 2025 (திங்கட்கிழமை)
---> தேவைப்பட்டால் வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: செப்டம்பர் 9, 2025 (செவ்வாய்க்கிழமை)
---> வாக்குப்பதிவு நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
---> வாக்கு எண்ணிக்கை: செப்டம்பர் 9, 2025 (செவ்வாய்க்கிழமை)

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் மேற்குறிப்பிட்ட தேதிகளின் அடிப்படையில் நடைபெறும். ஒருவேளை வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படாமல், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால், வாக்குப்பதிவு செப்டம்பர் 9-ம் தேதி நடத்தப்பட்டு, அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் வேட்பாளராக யார் களமிறக்கப்படுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. துணைக் குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளை (மக்களவை, மாநிலங்களவை) சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.