Breaking news

அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்.. வெளியானது புதிய அறிவிப்பு!

பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்.. வெளியானது புதிய அறிவிப்பு!
Change in working hours of non-teaching staff working in schools
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற அமைச்சுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை என இருந்து வந்தது.

இதனிடையே, அமைச்சுப் பணியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணி நேரத்தினை / இருப்பினை கவனிப்பதற்கென வேலை நேரத்தினை காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி உத்தரவிடப்பட்டது. இதற்கு அமைச்சுப் பணியாளர்களின் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதுத்தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர், பழைய நேரத்தை பின்பற்ற உத்தரவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்திர மோகன்,பள்ளி கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள அரசு கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு:

”பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை மாற்றியமைத்தது தொடர்பான அறிவிப்பாணையினை இரத்து செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போன்று அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்குமான வேலை நேரத்தினை மீண்டும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை என நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாலும், அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரத்தினை நிருவாக நலன் கருதி ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளதாலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரத்தினை காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை என்று மாற்றியமைத்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையினை கவனமாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று, பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் அரசாணை (நிலை) எண்.85. பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறை, நாள் 11.03.1992-ன்படி, காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றி அமைக்கப்படுகிறது.

மேலும், இவ்வேலை நேரத்திற்கு பின்பு வழக்கமான பணிகள் அல்லாமல் முக்கிய மற்றும் அவசர பணிகள் இருக்கும் போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் முறைப்பணிக்கு வரிசைக் கிரமமாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்களை அலுவலகம் வரும்படி அலுவலகத் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் உரிய அறிவுறுத்தங்களை சுற்றறிக்கை மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.