ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பக்தர்கள் அதிக அளவில் கோயிலில் குவிந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகன் கோவில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் உட்பட உலக அளவில் உள்ள முருக பக்தர்கள் முருகனை தரிசிக்க கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படக்கூடிய முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் அறுபடைக்கோவில்களும் சிறப்பு வாய்ந்தது. அதில் குறிப்பாக மற்ற ஊர்களில் மலை குன்றுகளில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், திருசெந்தூரில் கடற்கரையில் ரம்மியமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் முக்கியமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், 3 வருடங்களுக்கு முன்பே நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோயில் திருப்பணிகள் முடிவுற்று இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

வழக்கமான நாட்களைவிட கோயில் கும்பாபிஷேக நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருச்செந்தூரில் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் செய்யும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.