ஆன்மிகம்

Purattasi 2024 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை : பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்...

Purattasi Viratham 2024 Third Saturday : இன்று (அக். 5) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெருமாளை தரிசித்தால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Purattasi 2024 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை : பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்...
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை : பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

Purattasi Viratham 2024 Third Saturday : தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோர்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பல்லாயிரகணக்கான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் இன்று (அக். 5) அதிகாலை சீனிவாச பெருமளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி  தரிசனம்  செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்தி கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள், அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் புரிந்து ஆடு, மாடுகள், விவசாய பொருட்கள், தானிய பொருட்கள் போன்றவற்றை ஸ்ரீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக வழங்குவார்கள். இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் விருதுநகரில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள  இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான விழாவையொட்டி உற்சவர் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி தாயார், ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதனை அடுத்து கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க கருட படம் வரையப்பட்ட வஸ்திரத்தை கொண்டு கொடியேற்ற வைபவம் நடைபெற்றது.

மேலும் படிக்க: “ரஜினி சார் ஹெல்த்... அப்படிலாம் சொல்லாதீங்க... பயமா இருக்கு” லோகேஷ் கனகராஜ் பதற்றம்!

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலில் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது. தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தேவநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.