Mysterious Hindu Temples in India : ’இந்திய’ கலாச்சரத்தில் முக்கியப் பங்காற்றுவது கோயில்களும் தெய்வங்களும்தான். பண்டைய காலத்தில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வரலாற்று சிறப்பு இருக்கும். கோயில்கள் கட்டப்பட்ட ஆண்டு, இடம், கட்டுமானப் பொருட்கள், சிற்பங்கள், வடிவம், அமைப்பு என நாம் தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்களை நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ளனர்.
பாரம்பரியம் என்று வரும்போது ஒவ்வொரு மாநிலமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டு தனித்து நிற்கின்றன. நவராத்தியின்போது வடமாநிலத்தவர்கள் அசைவ உணவை முற்றிலும் தவிர்த்துவிடுவர். ஆனால் அதே நவராத்திரியின்போது வங்க தேசத்தில் பக்தர்களுக்கு ‘மீன்’ உணவு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். இது ஒரு புறம் இருக்க.. மறுபுறம்... பேய்களை விரட்டுதல், பில்லி சூனியத்தை எடுப்பது, கொதிக்கும் எண்ணெய்யை கையாலேயே தொடுவது, கொதிக்கும் தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறுவது உள்ளிட்ட அதிசயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?
இப்படி நமது தாய் நாட்டில் உள்ள அரிய, அதிசய மற்றும் மர்மம் நிறைந்த கோயில்கள் குறித்தும் அங்கு நடக்கும் வழிபாடுகள் குறித்தும் கீழே பார்க்கலாம்.
காமாக்யா தேவி கோயில்:
அசாம் மாநிலம்(Assam) கவுஹாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில்(Maa Kamakhya Devi Temple), மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. சக்தியின் மற்றொரு அவதாரமான காம்க்யா தேவியின் மாதவிடாய் யோனி விழுந்த இத்தலத்தை, அவருக்காக அர்ப்பணித்து கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. எனவே மற்ற கோயில்களில் இருப்பதுபோல் இங்கு சுவாமி சிலை இருக்காது. அதற்கு பதிலாக தேவியின் யோனி பட்ட இடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
தேவ் ஜி மகராஜ் கோயில்:
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில்(Devji Maharaj Temple) அவிழ்க்க முடியாத பல மர்ம முடிச்சுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தீய ஆத்மாக்கள், துர்சக்திகள் மற்றும் பேய்களை விரட்டுவதில் இந்த கோயில் பெயர்போனதாகும். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ‘பூஷ் மேளா’ திருவிழாவில் இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். குறிப்பாக பேய் பிடித்தவர்கள், தீய ஆத்மாக்களால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இங்கு அழைத்துவரப்பட்டு பூஜைகள் செய்து பேயை விரட்டும் நிகழ்வுகள் மிக பிரமாண்டமாக நடைபெறும்.
பிஜிலி மகாதேவ்:
சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிஜிலி மகாதேவ் கோயில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை யாரும் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிசயம் நடக்குமாம். அதாவது சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கோயிலின் கருவறைக்குள் உள்ள சிவலிங்கத்தின் மீது மின்னல் பாயும் என்றும், அப்போது அந்த சிவலிங்கம் உடைந்து சுக்குநூறாகும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து உடைந்து சிதறிய சிவலிங்கத்தை கோயில் பூசாரிகள் வெண்ணெய் கொண்டு மீண்டும் ஒட்டவைப்பர் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில்:
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு(Sri Venkateshwara Swamy Temple) ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்ததே. சுவாமியின் சிலை மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றினால் அது உடனடியாக ஐஸ் தண்ணீராக மாறிவிடும் எனக் கூறப்படுகிறது.
கால பைரவர் கோயில்:
உஜ்ஜெயினில் அமைந்துள்ள இந்த கால பைரவர் கோயில் இந்தியாவில் உள்ள தனித்துவமான கோயிலாகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கால பைரவருக்குப் படைப்பதற்காக மது பாட்டில்களை வாங்கி வருவது வழக்கம். இந்த மதுவை சுவாமி சிலைக்கு அருகிலுள்ள பாத்திரத்தில் ஊற்றிவிடுவர். ஆனால் சில நொடிகளிலேயே ஊற்றி வைக்கப்பட்ட மது காணாமல் போய்விடும் என பக்தர்கள் ஆச்சரியமாகக் கூறுகின்றனர். கால பைரவரே அந்த மதுவை குடித்துவிடுவதாக ஒரு நம்பிக்கை.
நிதிவன்:
உத்திரபிரதேசம் பிரிந்தாவனத்தில் அமைந்துள்ளது நிதிவன் கோயில். இங்கு ஒவ்வொரு இரவும் கிருஷ்ணரும் ராதையும் ‘ராசலீலா’ பாடுவதாகக் கூறப்படுகிறது. இந்த வனத்தில் உள்ள அனைத்து மரங்களும் வித்தியாசமாக இருக்கும். அதாவது மரக்கிளைகள் தரையை நோக்கியும், வேர்கள் வானத்தை நோக்கியும் அப்படியே இயற்கைக்கு மாறாக வளர்ந்து நிற்கும். கிருஷ்ணரும் ராதையும் நிகழ்த்தும் ராசலீலாவை பொதுமக்கள் யாரேனும் பார்க்க நினைத்தால் கண் பார்வை பறிபோகும் என்று நம்பப்படுகிறது. எனவே மாலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களாம்.
மெஹந்திபூர் பாலாஜி:
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயில் பேய் ஓட்டுவதற்கு பெயர்போனதாகும். தீய ஆத்மாக்களால் ஆட்கொள்ளப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து பூஜைகள் மற்றும் சடங்குகள் மூலம் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.