கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கோயிலான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சகணக்கான மக்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதமும் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நவம்பர் 15-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது.
ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். சாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே இருக்கைகள், மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படுகிறது. மேலும், கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது மண்டல பூஜை காலம் நிறைவடைய உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஒரே நாளில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற இடங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் இன்றும் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு வருவதால் பம்பையில் இருந்து குழுவாக பிரிக்கப்பட்டு தடுப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டு சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நடைப்பந்தலிலும் பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நாளை மறுநாள் (டிசம்பர் 26) சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நாளை (டிசம்பர் 25) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 26) ஆகிய நாட்களில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (டிசம்பர் 26) மண்டல பூஜை முடிந்தவுடன் சபரிமலை நடை அடைக்கப்பட்டு மீண்டும் வரும் 30-ஆம் தேதி நடை திறக்கப்படும். இதனால் மண்டல பூஜைக்கு முன்பாக ஐயப்பனை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.