ஆன்மிகம்

கடக ராசிக்காரர்களே இது திருப்பி கொடுக்கும் நேரம்.. குரு பெயர்ச்சி பலன்கள் 2025

கடகம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

கடக ராசிக்காரர்களே இது திருப்பி கொடுக்கும் நேரம்.. குரு பெயர்ச்சி பலன்கள் 2025
kadagam rasi guru peyarchi palangal 2025
நவகிரஹங்கள் ஒன்பதுமே குறிப்பிட்ட கால இடைவெளியில நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதே சமயம், குரு, ராகு-கேது, சனி கிரஹங்களின் நகர்வுகள் மட்டுமே அனைவராலும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்றும், திருக்கணிதப்படி 14.05.2025 அன்றும் குருபெயர்ச்சி ஏற்பட உள்ளது. இதனடிப்படையில், கடகம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.. அதன் விவரம் பின்வருமாறு-

கடகம்:

குருபகவான், உங்க ஜன்மராசிக்கு ஆறாமிடமான தனுசுக்கும் ஒன்பதாம் இடமான மீனத்துக்கும் உரியவர்ங்க. அவர் தற்போது உங்க ராசிக்கு பதினோராம் இடமான ரிஷபத்துல இருந்து பன்னிரண்டாம் இடமான மிதுனத்துக்கு வர்றார்ங்க. இது விரய ஸ்தானமாக இருந்தாலும் குருவின் விசேஷப் பார்வைகள் உங்க ராசிக்கு 4, 6,8-ம் இடங்கள்ல பதிவதையும் இவை முறையே மாத்ரு சுகஸ்தானம், சத்ரு ரோக ஸ்தானம், ஆயுள் ஸ்தானமாக இருப்பதை கணக்கில் கொள்ளணும்க.

இந்தசமயத்துல திருக்கணிதப் படியான பெயர்ச்சியில சனிபகவான் உங்கராசிக்கு அஷ்டமத்துல இருந்து நகர்ந்து ஒன்பதாம் இடத்துக்குச் சென்றுவிட்டதையும், வர இருக்கற பெயர்ச்சியில ராகு உங்க ராசிக்கு எட்டாம் இடத்துக்கும், கேது இரண்டாம் இடத்துக்கும் வர இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்குங்க. இதுல எட்டாம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம்க. இரண்டாம் இடமென்பது வாக்கு ஸ்தானம்க. அஷ்டமஸ்தானத்துல இருந்த சனி விலகுவதே நல்ல விஷயம்க. இத்தகைய கோள்சார அமைப்பு, இது உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும் என்பதைக் காட்டுதுங்க.

வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்பு:

பணியிடத்துல உங்க திறமைக்கு உரிய உயர்வுகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கும்க. வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்க. இந்த சமயத்துல வேண்டாத வாதமும், வீணான ரோஷமும் தவிர்த்தா, ஏற்றம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக ஏற்படும்க. தன்னம்பிக்கை அதிகரிச்சாலும் அதை தலைகனம் ஆக்கிக்காம இருக்கறது அவசியம்க. உங்க பொறுப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம்க. பிறர் செய்யும் தவறுக்கு நீங்க பழி ஏற்கும் நிலை வரலாம், எந்த சமயத்திலும் கவனச் சிதறலைத் தவிருங்க. வேலை தேடுவோர்க்கு, புதிய பணி வாய்ப்பும் அதனால், பெருமையும் உண்டாகும்க. மனம்போல உயர்வுகள் வர்ற இந்த சமயத்துல, பிறர் தவறை நீங்க பெரிதுபடுத்த நினைச்சா, அதுவே உங்க ஏற்றத்தை ஏமாற்றமாக்கிடலாம் புரிஞ்சு நடந்துக்குங்க.

குடும்பத்துல குதூகலமான சூழல் நிலவத் தொடங்கும்க. இதுவரைக்கும் மனசுல இருந்த இனம்புரியாத பயம் நீங்கி நிம்மதி நிலவும்க. உறவுகள் நட்புகள் ஆதரவுக் கரம் நீட்டும்க. அதிக உணர்ச்சிவசப்படுதலும் அநாவசிய வாக்குவாதமும் யாரிடமும் வேண்டாம்க. விலை உயர்ந்த பொருட்களால விரோதம் வரக்கூடும்க. யாருக்கும் இரவல் தருவதோ, யாரிடமிருந்தும் பெறுவதோ கூடாதுங்க. ஆடை, ஆபரணம், வாகன வசதிகள் சேரும்க. சுபகாரியத் தடைகள் விலகும்க.

நிதி திட்டமிடல் இல்லையென்றால் கடன்சுமை மிஞ்சும்:

மனம்போல நல்லவை நடக்க, மனம்விட்டுப் பேசுவது நல்லதுங்க. விடுபட்ட குலதெய்வ வழிபாடுகளை செய்தவதற்கான சந்தர்ப்பம் அமையும்க. செய்யும் தொழில்ல படிப்படியா வளர்ச்சி ஏற்படும்க. லாபம் அதிகரிக்கும் சமயங்கள்ல அதை சரியான முறையில சேமிப்பாக ஆக்கிக்குங்க. நிச்சயம் இல்லாத பங்குவர்த்தகம் போன்றவற்றுல ஈடுபட்டா, கைப்பொருளும் கரைஞ்சு, கடன்சுமைதான் மிஞ்சும்க. வர்த்தகக் கடன்கள் உரிய காலத்துல நிச்சயம் கைகூடும்க. இதுல வேண்டாத அவசரமும் அலைச்சலும் தவிருங்க.

அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு வார்த்தை, செயல் இரண்டிலுமே நிதானம் முக்கியம்க. பொது இடத்துல பேசும்போது அநாவசிய வாக்குறுதிகள் எதும் தரவேண்டாம்க. மேலிடத்தின் அனுமதி இல்லாம எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம்க. பிறர் கட்டாயத்துக்காக ஜாமீன் தருவதோ, எதையும் படித்துப் பார்க்காமலே கையெழுத்திடுவதோ உங்களுக்கு நீங்களே சங்கடத்தை தேடிக்கறதாக ஆகிடலாம்க. கூட இருந்தே குதர்க்கம் பேசும் நபர்களால், குழப்பம் ஏற்படலாம் என்பதை உணர்ந்து ஒதுங்குங்க.

அயல்நாட்டு கல்விக்கு வாய்ப்பு:

மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிச்சுடறது நல்லதுங்க. அயல்நாட்டுக் கல்விக்கு வாய்ப்பு கைகூடும்க. அகாலநேரத்துல விழித்திருந்து படிக்கறதைவிட அதிகாலைல எழுந்து படிக்கறதுதான் நல்லதுங்க. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும் சமயத்துல நடைமுறை சட்டதிட்டங்களை முழுமையாக மதிக்கணும்க. கலை, படைப்புத் துறையினர் ரகசியங்கள் எதையும் பரம ரகசியமா வைச்சுக்குங்க. வீண் சந்தேகங்களைத் தவிருங்க. வேண்டாத சகவாசம் விபரீதம் ஏற்படுத்திடலாம், உடனே உதறிடுங்க.

வாகனப் பயணத்துல கவனச்சிதறல் கூடாதுங்க. தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் சமயத்துல இடைவழியில போதுமான ஓய்வு எடுத்துக்கறது அவசியம்க. வழிப்பாதையில் இருட்டான இடங்கள்ல தனியே இறங்குவதை தவிருங்க. முதுகுத் தண்டுவடம், முக உறுப்புகள், கழுத்து, நரம்பு, அடிவயிறு, ரத்தத் தொற்றுநோய் உபாதைகளை உடனே கவனியுங்க. கர்ப்பிணிகள் கூடுதல் கவனமா இருங்க.இந்தக் காலகட்டத்துல ஆலங்குடி திருத்தலம் சென்று சுவாமி, அம்பாள், தட்சிணாமூர்த்தியை வணங்கிட்டு வாங்க. இஷ்ட மகானை எப்போதும் வணங்குங்க. உங்க வாழ்க்கை தழைக்கும்.