அதிமுகவா? தவெகவா?.. முட்டிமோதும் தந்தை மகன்?.. தைலாபுர கூட்டணி கணக்கு என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கும் - அன்புமணிக்கும் இடையே மீண்டும் வாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Mar 16, 2025 - 10:04
 0

தேர்தல் என வந்துவிட்டால் கூட்டணி வைப்பது சகஜம் தான். மற்ற கட்சிகள் கூட்டணி கணக்கை தொடங்கி, கிட்ட தட்ட பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு தான், ரயில் கிளம்பிய பிறகு ஓடி வந்து சீட் பிடிக்கும் பா.ம.க. ஆனால், இம்முறை முன்கூட்டியே ரிசர்வ் செய்து பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது என்பது தான் தைலாபுர ஹைலைட். 
 
தைலாபுரத்தில் ஒலிக்கும் இந்த கூட்டணி டாக்ஸ் கட்சிக்காரர்களையே ஷாக் ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கடைசிக்கட்டம் வரை யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் சொதப்புவது போல இம்முறை இருக்கக் கூடாது என பா.ம.க. தலைமை நினைக்கிறதாம். அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.கவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் தைலாபுரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது 'மக்களவைத் தேர்தல் என்பதாலும், சில காரணங்களுக்காகவும் 2024 எம்.பி. தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். 

இதற்கிடையே, மாநிலக் கட்சியாக நாம் அங்கீகாரம் பெறுவதற்கும், 2026 தேர்தலில் குறிப்பிடத்தக்க எம்.எல்.ஏ.க்களை பெறுவதற்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதே சரியாக இருக்கும்' என ராமதாஸ் பேசியதாக தைலாபுர வட்டாரத்தினர் சொல்கின்றனர். 

அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸோ, 'தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. பொறுமையாக யோசித்து முடிவெடுப்போம்' என்று தயக்கம் காட்டியதாக தெரிகிறது. ஆனால், ராமதாஸோ, 'எந்த ஒரு முடிவையும் நான்தான் எடுப்பேன். இந்த தடவை ஏன் எதற்கு என்று கேட்காமல், நான் சொல்வதைக் கேளுங்கள். இது எனது கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம்' என்று சென்டிமென்டாக பேசி, அன்புமணியை கரைய வைத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராஜ்யசபா சீட்டை கொடுத்தால், அதிமுக உடன் கூட்டணி வைக்கத் தயார் என எடப்பாடியிடம் அன்புமணி டீலிங் பேசியதாக கூறப்பட்டது. இதனால் இவர்களது கூட்டணி உறுதி என்றே அரசியல் வட்டாரத்தினர் தெரிவித்தனர். ஆனால் தற்போது அன்புமணியே அதிமுகவுடன் கூட்டணி என்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறார் என விசாரித்த போது தான் வேறொரு புதிய கணக்கை அவர் போடுகிறார் என தகவல் கசிந்துள்ளது. அதாவது அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிட்டு, தற்போது நாம் ஏன் தமிழக வெற்றிக் கழகத்தை அணுகக்கூடாது என அன்புமணி யோசிப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow