சினிமா

Actor Jiiva: குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா... சாலையில் தலைகீழாக கவிழ்ந்த சொகுசு கார்!

சேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் ஜீவாவும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

Actor Jiiva: குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா... சாலையில் தலைகீழாக கவிழ்ந்த சொகுசு கார்!
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா

கள்ளக்குறிச்சி: தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரியின் மகனான ஜீவா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் 2003ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜீவா, ராம், ஈ, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்தாண்டு ஜீவா நடிப்பில் வெளியான தெலுங்குப் படமான யாத்ரா, எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மேதாவி, கண்ணப்பா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.  

இந்நிலையில், தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்த ஜீவா விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனது காரில் சேலம் சென்றுள்ளார் நடிகர் ஜீவா. ஜீவாவுடன் அவரது மனைவியும் காரில் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே நபர் ஒருவர் கடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவா, அந்த நபர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியுள்ளார். 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஜீவாவும் அவரது மனைவியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் ஜீவா ஓட்டிச் சென்ற கார் பயங்கரமாக சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜீவா விபத்தில் சிக்கியதை அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜீவா, அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க - பொங்கல் ரேஸில் தக் லைஃப் VS விடாமுயற்சி

முன்னதாக விபத்தில் சிக்கிய காரிலிருந்து தனது பொருட்களை எடுத்துக்கொண்டிருந்துள்ளார் ஜீவா. அப்போது ஜீவாவின் முகக் கவசத்தை ஒருவர் அகற்ற கூறியதால் ஆத்திரமடைந்த அவர், அந்த நபரிடம் கோபமாக நடந்துகொண்டார். ஜீவாவின் கார் விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.