TVKVijay: “நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்..” தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Aug 21, 2024 - 16:30
Aug 21, 2024 - 17:18
 0
TVKVijay: “நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்..” தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் விஜய்!
நாளை தவெக கொடியை அறிமுகப்படுத்தும் விஜய்

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கி வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள விஜய், தனது கட்சியின் பெயரையும் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ள அவர், நாளை தவெக கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக அபிஸியலாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் வைரலாகி வருகிறது. 

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான், 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம்” என குறிப்பிட்டுள்ளார். அதன்படி நாளை (ஆக.22) காலை 9.15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டு, கழகத்தின் கொடிப் பாடலும் வெளியிடப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கான பிரத்யேக பாடல்களை கவிஞர் விவேக் எழுதியுள்ளதாகவும், அதற்கு தமன் இசையமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் படங்களுக்கு கவிஞர் விவேக் தான் பாடல்கள் எழுதி வருகிறார். அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற விவேக்கின் இல்ல நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், பனையூர் கட்சி அலுவலகத்தில் 500 நாற்காலிகள் போடப்பட்டு, பிரம்மாண்ட LED திரை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் கொடியேற்றும் பகுதியில் கூட்டமாக யாரும் நிற்கக் கூடாது எனவும் தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.  

முன்னதாக தவெக கொடியில் வாகை மலை இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது வெளியான தகவல்படி, வாகை மலருக்குப் பதிலாக லோகோ ஒன்று இடம்பெறும் எனத் தெரிகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், அதனை மையமாக வைத்து இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கொடி அறிமுக நிகழ்ச்சியில், தவெகவின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் பங்கேற்கும்படி விஜய் உத்தரவிட்டுள்ளாராம். 

அதேபோல், பனையூர் வரும் தவெக நிர்வாகிகளிடம் தேவையான அளவு கொடிகளை கொடுத்து, அவைகளை கிராமங்களில் நிறுவ வேண்டும் எனவும் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடியை ஏற்றவும் ரசிகர்கள் பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி தவெக நிர்வாகிகள் கொடியை ஏற்ற முடிவு செய்திருந்தால், திரையரங்குகளில் கூட்ட நெரிசலோ அல்லது தள்ளுமுள்ளு ஏற்பட்டோ அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது எனவும் விஜய் அறிவுறுத்தியுள்ளாராம். 

     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow