சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை.. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் தூய்மை பணியாளர்களை இழிவாக பேசியதாக கூறி தூய்மை பணியாளர்கள் என கூறிக் கொண்டு சிலர் அவரது வீட்டில் கழிவு நீர், மலத்தை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்த சவுக்கு சங்கர் தாயார் கமலாவை மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து வாணிஸ்ரீ விஜயகுமார் உள்பட 20 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 5 பேருக்கும் நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் சவுக்கு சங்கர் இன்று (மார்ச் 27) காலை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தார். சிபிசிஐடி ஐஜியை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்காததால் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி-யை சந்தித்து தனது வீடு சூறை வழக்கில் ஏன் 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்? என்பது தொடர்பாக முறையிட்டார்.
இதையடுத்து வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வழக்கை சிபிசிஐடி-க்கு உடனடியாக மாற்றும் போதே சந்தேகம் ஏற்பட்டது. பிணையில் வரக்கூடிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதனால் சிபிசிஐடி மீதும் நம்பிக்கை இல்லை. குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் சிபிசிஐடி செயல்படுகிறது.
காவல்துறைக்கு தெரிந்தே தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை அனுமதி வாங்கிக்கொண்டு தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1500 தூய்மை பணியாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். தனியார் நிறுவனம் மூலமாக எடுத்ததால் தான் ஊழல் செய்கிறார்கள். 100 சதவீதம் சிபிசிஐடி சரியான விசாரணை நடத்தும் என நம்பிக்கை இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை தவிர வேறு யாரும் தூய்மை பணியாளர்கள் இல்லை. அனைவரும் தூண்டுதலின் பேரில் வந்த கூலிப்படைகள். அவர்கள் தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் வந்துள்ளனர். நீதிமன்ற பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடக்க வேண்டும் அல்லது வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






